தேடுதல்

இரஷ்ய ஆலைகள் வெளியிடும் புகை இரஷ்ய ஆலைகள் வெளியிடும் புகை  (ANSA)

காலநிலை மாற்ற விளைவுகளுக்கு துணை போகும் நாடுகள்

முன்னர் பரிந்துரைக்கப்பட்ட அளவீடுகளை நாடுகள் நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம் நிறைந்ததாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2020ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுக்குள் கொண்டுவர வேண்டும் என 2009ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை இதுவரை நிறைவேற்றியுள்ளது குறித்து ஆய்வுச் செய்யப்பட்டதில் 56 விழுக்காட்டு நாடுகள் தவறியுள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முன்னர் பரிந்துரைக்கப்பட்ட அளவீடுகளை, ஆய்வுச் செய்யப்பட்ட 34 நாடுகளுள் 19 நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகளைச் செயல்படுத்துவது சிரமம் நிறைந்ததாக உள்ளது என்கிறது இந்த ஆய்வு.

காலநிலை மாற்ற விளைவுகளைக் குறித்து உலக சமுதாயம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட Laudate Deum என்ற தன் அப்போஸ்தலிக்க ஏட்டில் கவலையை வெளியிட்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி, இலண்டன் கிங்ஸ்டன் பலகலைக்கழகம், Groningen மற்றும் Tsinghua பலகலைக்கழக ஆய்வாளர்கள் என பலர் ஒன்றிணைந்து நடத்தி வெளியிட்டுள்ள இந்த ஆய்வு, மேலை நாடுகளின் கரியமில வாயு வெளியேற்றம் குறித்த  விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட 34 நாடுகளுள், பல்கேரியா, குரொவேசியா, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரேக்கம், இத்தாலி, இலாத்வியா, லித்வேனியா, ரொமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு என 15 நாடுகளே கரியமில வாயு வெளியேற்ற பரிந்துரைகளுக்கு இணங்க குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கானடா, சைப்ரஸ், அயர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, போர்த்துக்கல், ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து போன்றவை கரியமில வாயு வெளியேற்ற கட்டுப்பாடு பரிந்துரைகளை முற்றிலுமாக நிறைவேற்றத் தவறியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம், செக் குடியரசு, பிரான்ஸ், ஹங்கேரி, லக்ஸம்பர்க், மால்ட்டா, போலந்து ஆகிய 7 நாடுகள் தங்கள் நாட்டிற்குள் மட்டும் இதனை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், அதாவது, கார்பன் வெளியீடு தொடர்புடய தங்களுக்கான பெரும்பணிகளை வேறு நாடுகள் வழி நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2024, 14:11