தேடுதல்

மீட்புப் பணி மீட்புப் பணி   (ANSA)

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் பாதுக்கப்ட்டுள்ளவர்களுக்கு யுனிசெப் உதவி!

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாப்புவா நியூ கினியா பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் குடி வெளியேற்றும் மையங்கள் (evacuation centres), இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஆதரவை வழங்கி வருகின்றன : யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாப்புவா நியூ கினியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 16 வயதிற்குட்பட்டவர்கள் என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது யுனிசெப் நிறுவனம்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாப்புவா நியூ கினியாவின் Enga மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்கு யுனிசெப் நிறுவனம் அதன் அவசர நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெப் நிறுவன பிரதிநிதி Angela Kearney, அவர்கள், இந்தப் பயங்கரமான இயற்கைப் பேரழிவில் இருந்து தப்பியவர்களுக்கு முக்கிய ஆதரவை வழங்க, பாப்புவா நியூ கினியாவில் உள்ள அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று உரைத்துள்ளார்.

இப்பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று சுட்டிக்காட்டியுள்ள Kearney அவர்கள், குடும்பங்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளதால் அம்மக்கள் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தற்போது, அம்மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க முனைந்துள்ளதாகவும், குறிப்பாக, வாளிகள், ஜெர்ரி கேன்கள் மற்றும் சோப்பு போன்ற அடிப்படை சுகாதாரப் பொருள்களை வழங்கி வருவதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது யுனிசெப் நிறுவனம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தண்ணீர் மற்றும் உடல்நலம், கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான பரந்த தேவைகளை நிறுவுவதற்கான விரைவான மதிப்பீட்டுத் திட்டங்களில் யுனிசெஃப் பங்கேற்றது என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாப்புவா நியூ கினியா பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன், குடி வெளியேற்றும் மையங்கள் (evacuation centres), இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஆதரவை வழங்கி வருவதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது யுனிசெப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2024, 16:07