உக்ரைனில் 29 இலட்ச குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனில் கடந்த 800 நாட்களாக நடைபெற்று வரும் போர் மக்களின் வாழ்வை சீர்குலைத்து வருகிறது என்றும், இதனால், அந்நாட்டில் 29 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது என்றும் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.
மே 9, இவ்வியாழனன்று இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், கார்கிவ் நகரில் மே 8, இப்புதனன்று நடந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் காயமடைந்ததையும், நிகோபோலில் 1 குழந்தை காயமடைந்ததையும் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
உக்ரைனில் போர் தொடங்கிய நாளிலிருந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் உதவ யுனிசெப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும், 2024-ஆம் ஆண்டு மட்டும், 7,75,000 உக்ரேனியர்களுக்குத் தூய்மையான தண்ணீர் மற்றும் 14 இலட்சம் நலவாழ்வு கருவிகள், மேலும் அடிப்படை உதவிகளுடன்; 39,000 பள்ளிக் குழந்தைகள் நிகழ்நிலை (online) வழியாகக் கற்கும் கணினிகளையும் யுனிசெப் நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் யுனிசெப் நிறுவனம் கூடுதலாக, 4,00,000 குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு 'என்னுடைய பாதுகாப்பு' என்ற தலைப்பில் பயிற்சி அளித்துள்ளது என்றும், 2,36,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கியுள்ளது, மற்றும் ஸ்பில்னோ (Spilno) குழந்தைகள் மையங்களில் 2,50,000 பேருக்கு தஞ்சம் அளித்துள்ளது என்றும் உரைக்கிறது அதன் அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்