வாரம் ஓர் அலசல் – தாயை காக்கும் தருணம் - உயிரியல் பல்வகைமை தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காகவும், உலக சமுதாயத்தினரிடையே உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், உயிரியல் தொடர்புடைய பல்வகைமை பற்றிய அனைத்துலக தினம் மே 22ஆம் தேதி, அதாவது, வரும் புதன்கிழமையன்று கடைபிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு, “உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்புத் திட்டத்தின் பகுதியாக இருங்கள்”, என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை, கால நிலையும் அதைவிடப் பயங்கரமானதே. உயிரியல் என்பது 'உயிர் வாழ்வன' பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும், அவை எதிர்நோக்கக்கூடிய சவால்களை கவனத்தில் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும், விளக்கங்களையும் முன்வைப்பதாகும்.
இப்படி ஒரு தினத்தின் அவசியம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். தேவையுள்ளது. இன்றைய உண்மை நிலைகளைப் புரிந்துகொண்டால் அதன் தேவையை நாம் உணரலாம்.
"கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. புவியின் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து 129,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலேயே மீண்டும் கொண்டு வந்துவிடும்." என்று குறிப்பிட்டிருந்தார் ரிச்சேர்டு ஹாரிஸ் என்னும் அறிஞர். அதேவேளை, "கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டிப்படைந்துள்ளது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூமியின் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம்" என்று அறிவியலாளர்கள் எண்ணுகின்றனர். எதிர்பார்த்ததை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன. இது காலநிலை மாற்றத்தின் விளைவு.
மேலும், புவியின் வெப்பநிலை அதிகரிப்பதனால் காலநிலை கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புகள் போன்றவற்றைக் காண்கின்றோம். நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வறட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் அச்சம் இன்று ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களாக காலநிலைமாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகளே இதற்கான உதாரணங்களாகும்.
அடுத்து, மரங்கள் மற்றும் தாவரங்களின் அழிவைப் பற்றிய உண்மை நிலைகளைக் காண்போம்.
காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் மாசு காரணமாக மரங்கள் பெருமளவுக்கு அழிந்து விட்டன. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதன் மூலமாகவும் மரங்கள் பெருமளவு சேதமடைந்து, பெரும்பாலானோரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகளவில் சராசரியாக 33.3 விழுக்காடு வனப்பகுதி உள்ள நிலையில், இந்தியாவில் 21 விழுக்காடு அளவிற்கே வனப்பகுதிகள் உள்ளன. 2001 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ஏறக்குறைய 16 இலட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக உலக இயற்கை வள அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில், கடந்த 100 ஆண்டுகளில், 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளிலிருந்து இல்லாமல் போய் விட்டதுடன், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பையும் வெகுவாக பாதித்துள்ளது.
நமது தற்போதைய உணவு விநியோக முறையின் 80 விழுக்காடு, அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்ததாகவே உள்ளன. உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட பன்முகத்தன்மை இழப்பு, நமது வாழ்க்கை நடைமுறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் அறியப்பட்டிருக்கும் 8 விழுக்காட்டளவிலான உயிரினங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளன. மேலும் 22 விழுக்காட்டு உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன. இவ்வாறு, 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும் உலகில் உயிர் பல்வகைமை அழிவடையும் வேகம் பத்தாயிரம் மடங்காக அதிகரித்துள்ளது.
"உலகத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 2050ஆம் ஆண்டில் 910 கோடியாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது'. அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு.
நாம் என்னச் செய்யப் போகிறோம் என்பது நமக்கு முன்னால் வைக்கப்படிருக்கும் முதல் கேள்வி.
காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை இழப்பு மற்றும் சூழல் மாசடைதல் ஆகிய மூன்று சிக்கல்களைத் தீர்க்க புதிய அறிவு மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புவி என்று நாம் கூறும் போது மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்து மைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி, பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.
மனித இனம் உயிர் வாழ்வதற்கு உயிரியல் பன்முகத்தன்மை மிகவும் அவசியமானதாகும். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும், உயிரியல் பன்முகத்தன்மையால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் நடைமுறைகளை சார்ந்தே உள்ளன.
நீடித்த வளர்ச்சி என்பது இயற்கை வளங்களை சிக்கனமான முறையில், திறம்பட பயன்படுத்துவதை உணர்த்துகிறது. தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்களை நம்பியுள்ள ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
நம் நாட்டில் பரவி விரிந்துள்ள அனைத்து மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமை மற்றும் இயற்கை பற்றி போதிக்கின்றன. இந்திய பாரம்பரியம், பூமித்தாயை சிறப்பிப்பதில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
2200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை ஆண்ட பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே, உயிர் பலிகள், விளையாட்டிற்காக வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக அரச ஆணை வழியாக, பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் போன்றவற்றுக்காக பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள் முறைப்படி உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இயற்கையை பாதுகாப்பது என்பது நமது மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒன்றாகும்.
உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து எடுக்கப்படும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும்.
நம்மை பாதுகாத்து வருவதுதான் பூமித்தாய். தற்போதோ அந்த பூமிப் பந்தை நாம் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஆம். தாயை பாதுகாக்க வேண்டிய தருணம் அவள் குழந்தைகளுக்கு வந்துவிட்டது, என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்