ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்விச் சுதந்திரம்!
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் மேல்நிலைப் பள்ளிகளில் சேர தடைவிதிக்கப்பட்டு இன்றோடு 1000 நாட்கள் நிறைவடையும் நிலையில், யுனிசெப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேத்தரின் ரூசெல் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் தன்னுடைய அறிக்கையில், இன்றைய நாள் ஒரு சோகமான மற்றும் மனச்சோர்வு நிறைந்த நாளாக அமைந்திருக்கிறது என்றும், இந்த 1000 நாட்கள் என்பது பல இலட்சக்கணக்கான மணிநேர பாடங்களை இழந்ததற்குச் சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்தடையால் 15 இலட்சம் பெண் குழந்தைகளின், கல்விக்கான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்றும், அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, மனநலம் பாதிப்படைவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றும் உரைத்துள்ள கேத்தரின் ரூசெல் அவர்கள், குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளின் உரிமைகளை, அரசின் கொள்கைகளுக்கு பிணையக்கைதிகளாக மாற்றமுடியாது என்றும், அவர்களின் வாழ்க்கை, எதிர்காலம், நம்பிக்கை மற்றும் கனவுகள் அனைத்தும் சமநிலையில் துவங்கும் நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.
இந்தத் தடையின் தாக்கம் பெண் குழந்தைகளைத் தாண்டி இச்சூழல் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குவதோடல்லாமல், ஆப்கானிஸ்தானின் பொருளாதார மற்றும் வளர்ச்சிப்பாதையில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரூசெல் அவர்கள், கல்வி, வாய்ப்புகளை மட்டும் உருவாக்குவதில்லை, மாறாக பெண் குழந்தகளை, இளம் வயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு உடல்நலன் சார்ந்த குறைகளிலிருந்து பாதுகாப்பதோடு, ஆப்கானிஸ்தானை அடிக்கடி பாதிக்கும் வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளவும் அவர்களை வலுப்படுத்திடுகிறது என்றும் உரைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உதவ யுனிசெஃப் தன்னார்வலர்கள் கடுமையாக உழைப்பதாகவும், 27 இலட்சம் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி மற்றும் 6,00,000 இலட்சம் குழந்தைகளுக்கு சமூக அடிப்படையிலான கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்திய ரூசெல் அவர்கள், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் பயன்பெறுவதாகவும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து, பள்ளி உள்கட்டமைப்பை சிறந்த முறையில் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரமான நினைவைக் குறிக்கும் இந்நாளில், அனைத்துக் குழந்தைகளையும் உடனடியாகப் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்குமாறு அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட ரூசெல் அவர்கள், இச்சூழலில் முன்பிருந்ததை விட பாதிக்கப்பட்டிருக்கும் இச்சிறுமிகளின் வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் உழைக்கவும் ஆதரவளிக்கவும் உலகளாவிய சமூகத்தைக் கேட்டுக்கொள்வதாகவும், மக்கள் தொகையில் சம அளவு தொகை கவனிக்கப்படாமல் விடப்பட்டால் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் அடையாது என்பதையும் தன்னுடைய அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்