காசாவில் இறக்கும் தருவாயில் ஊட்டச்சத்துக் குறைப்பட்டுள்ள குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏறத்தாழ 3,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரின் கண்களுக்கு முன்பாகவே இறக்கும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இரஃபா நகரம் தாக்குதல் காரணமாக உதவிபெறுவதிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையொன்றில் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
ஜூன் 12, இப்புதனன்று, இந்தத் தகவலை அவ்வறிக்கையில் வழங்கியுள்ள யுனிசெஃப் நிறுவனம், ஆபத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் அம்மக்களை மரணம் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்குகிறது என்றும், தொடர்ந்து நிகழும் வன்முறை மற்றும் இடப்பெயர்வு, அவர்களுக்கு நல வசதிகள் பெறுவதற்குத் தடைகளாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் நோய்வாய்ப்படுவது பெரும் கவலை அளிக்கிறது என்றும், இரஃபாவின் வடக்குப்பகுதிக்கான உணவு உதவி விநியோகத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், தெற்கில் மனிதாபிமான அணுகல் வியத்தகு அளவில் குறைந்துள்ளது என்றும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
இதுகுறித்துக் கருத்துத்தெரிவித்துள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான யுனிசெஃப் மாநில இயக்குனர் Adele Khodr அவர்கள், உணவு, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் நலப் பணிகளின் செயல்படாத்தன்மை காரணமாகக் குடும்பத்தின் கண்களுக்கு முன்பாக அவர்தம் குழந்தைகள் இறக்கும் கொடூரமான படங்கள் காசாவிலிருந்து தொடர்ந்து வெளிவருகின்றன என்று தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.
மேலும் இந்த 3,000 குழந்தைகளுக்கான பராமரிப்பு விரைவாகத் தொடங்கப்படாவிட்டால், அவர்கள் கடுமையான நோய்களால் தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைச் சந்தித்து, இந்த மதியற்ற மனிதரால் உருவாக்கப்பட்ட பற்றாக்குறையால் கொல்லப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளின் பட்டியலில் சேரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் Khodr
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்போது வழக்கமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை இடைவிடாத பராமரிப்பும் மற்றும் சிறப்பு சிகிச்சை உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் பிற மருத்துவ உதவியும் அக்குழந்தைக்குத் தேவைப்படுகிறது என்றும் விளக்கியுள்ளார் Khodr.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்