தேடுதல்

தெற்கு காசாவில் போரில் காயம்பட்டுள்ள தாய் மற்றும் அவரது குழந்தைகள் தெற்கு காசாவில் போரில் காயம்பட்டுள்ள தாய் மற்றும் அவரது குழந்தைகள்   (AFP or licensors)

காசாவில் 21,000 குழந்தைகள் வரை காணவில்லை!

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது முதல் 14,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் : காசா நல அமைச்சகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் நிகழ்ந்து வரும் போரால் 21,000 குழந்தைகள் வரை காணவில்லை என்றும், பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர், பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், பலர் அடையாளம் தெரியாத கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களது குடும்பங்களை இழந்துள்ளனர் என்றும், அறிக்கையொன்றில் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இதற்கிடையில், குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்க தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், மோசமான பாதுகாப்பு நிலைமையால் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கின்றது அவ்வமைப்பின் அறிக்கை.

ஒவ்வொரு நாளும் தாங்கள் ஆதரவற்ற குழந்தைகளைக் காண்பதாகவும், அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்பது கடினம் என்றும் கூறும் காசாவிலுள்ள இவ்வமைப்பின் பணியாளர்கள், இருப்பினும், பல்வேறு சிரமங்கள் மத்தியிலும் அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் சேர்ப்பதற்குக் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் உரைத்துள்ளனர்.

தனித்துவிடப்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும் அண்டை வீட்டாரும், குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய அடிப்படைத் தேவைகளான தங்குமிடம், உணவு, தண்ணீர் போன்றவற்றைப் பூர்த்தி செய்யப் போராடுகிறார்கள் என்றும், இத்தகையதொரு சூழல் வன்முறை, முறைகேடுகள், சுரண்டல், புறக்கணிப்பு ஆகிய சமூகத் தீமைகளின் ஆபத்தை அதிகரிக்கின்றது என்றும் கவலை தெரிவித்துள்ளனர் அவ்வமைப்பின் பணியாளர்கள்.

மேலும் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள், உதிரி பாகங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொடுப்பதை உடனடியாக நிறுத்துமாறும்  பிரித்தானிய அரசை கேட்டுக்கொண்டுள்ளது Save the Children அமைப்பு.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது முதல் 14,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள வேளை, அவர்களில் பாதி பேர் இன்னும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை என்றும், அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர்களின் உடல்கள் சிதைந்துள்ளன என்றும் கூறியுள்ளது காசா நல அமைச்சகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2024, 14:30