தேடுதல்

உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள்   (KEYSTONE/EDA/POOL/URS FLUEELER)

உக்ரைன் போரை முடிவுக்கு கொணர சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு!

இந்த அமைதி மாநாட்டில் 92 நாடுகள் மற்றும் 8 அமைப்புகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்றதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

குழந்தைகளும் கூட கொடூரமாகக் கொல்லப்படும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலகத் தலைவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் அந்நாட்டின் அரசுத் தலைவர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி.

ஜூன் 15, இச்சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Burgenstock சுற்றுலா மகிழ்விடம் ஒன்றில் நடைபெற்ற உலகத் தலைவர்களின் அமைதி உச்சி மாநாட்டில் நிகழ்திய உரையின்போது இவ்வாறு தெரிவித்தார் ஜெலென்ஸ்கி. 

மேலும் மற்ற நாடுகளிலிருந்து குழந்தைகளை கடத்தவோ, அமைதியை குலைக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி அவர்கள், அத்தகைய கொள்கைகளின் செயல்திறனை நாங்கள் உறுதிசெய்ய முடியும் என்றும் தனது உரையில் தெரிவித்தார்.

பிப்ரவரி 2022-இல் இரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இரஷ்யா மற்றும் இரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு அவர்களின் வீடுகளில் இருந்து 20,000 உக்ரேனிய குழந்தைகள் நாடு கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்ததாக கியேவ் அறிக்கை கூறுகின்றது என்றும் குறிப்பிட்டார் ஜெலென்ஸ்கி.

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். முதலில், உக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெற வேண்டும். இரண்டாவதாக, யுக்ரேன் நேட்டோவில் சேரக் கூடாது.

இதற்குப் பதிலளித்த  உக்ரைன் அரசுத் தலைவர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள், புதினின் போர்நிறுத்த முன்மொழிவு ஓர் இறுதி எச்சரிக்கை போலத் தெரிகிறது என்றும், இதை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் போர்நிறுத்தம் தொடர்பான அவரது நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் புதின் இராணுவத் தாக்குதலை நிறுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2024, 15:11