உக்ரைனின் 8 மாநிலங்களுக்கு வாகன உதவிகளை வழங்கியுள்ளது யுனிசெஃப்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனின் நல அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், அதன் ஒன்பது மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 40 வாகனங்களை வழங்கியுள்ளதாக ஜூன் 25, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த வாகனங்கள் உக்ரைனின் நல அமைச்சகத்தின் மற்றும் யுனிசெஃப் நிறுவனத்தின் கூட்டுத் திட்டமான வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஆதரிக்கும் என்றும், இத்திட்டம் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தரமான உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் அரசு மற்றும் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் உள்ள யுனிசெஃப் தேசிய குழுக்களின் ஆதரவுடன் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன என்று உரைக்கும் அவ்வறிக்கை, இந்த வாகனங்கள் Dnipro, Kharkiv, Zhytomyr, Kirovohrad, Lviv, Poltava, Rivne, Chernihiv மற்றும் Kiev நகரத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறுகிறது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டிற்கான யுனிசெஃப் துணைப் பிரதிநிதி Veera Mendonca அவர்கள், வீடு சந்திப்பு (house visiting) என்பது, குழந்தைகளின் முதல் 1,000 நாட்களில், அதாவது, கருவுற்றது முதல் இரண்டு வயது வரையிலான காலகட்டத்தில் தரமான உடல்நலப் பாதுகாப்பு மற்றும் சேவைகளை அவர்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது என்றும், இது குழந்தைகளின் உகந்த வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
தவறவிட்ட வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகள், இயலாமை மற்றும் வளர்ச்சி சிக்கல்கள் போன்ற உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிய இம்முறை உதவுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள Mendonca அவர்கள், இதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான அவசர சேவைகளையும் ஆதரவையும் பெறமுடியும் என்றும், இது ஒவ்வொரு குழந்தைக்கும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு, வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தைப் பெற உதவுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்