2023-இல் ஏறத்தாழ 73 கோடியே 30 இலட்சம் மக்கள் பசியுடன் வாழ்ந்துள்ளனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2023-ஆம் ஆண்டில், ஏறத்தாழ 73 கோடியே 30 இலட்சம் மக்கள் பசியுடன் வாழ்ந்தனர் என்றும், இதில் உலகளவில் 11 பேரில் ஒருவரும் ஆப்பிரிக்காவில் மட்டும் 5 பேரில் ஒருவரும் அடங்குவர் என்றும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், சிறார் நிறுவனம், விவசாய மேம்பாட்டுக்கான அனைத்துலக நிறுவனம், உலக உணவுத் திட்ட நிறுவனம், உலக நல நிறுவனம் ஆகிய ஐந்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனங்களால் ஜூலை 24, இப்புதனன்று 'உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை' (SOFI) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஏறத்தாழ 233 கோடி மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர் என்றும், இவர்களில், ஏறக்குறைய 86 கோடியே 40 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டனர் என்றும் எடுத்துக்காட்டும் இவ்வறிக்கை, இம்மக்கள் சில வேளைகளில் ஒரு நாள் முழுவதும் அல்லது அதற்கும் மேலாகவும் உணவு இல்லாமல் தவித்தனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டின் வழக்குகள் உலகளவில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது (5 கோடியே 5 இலட்சம் அளவிற்கு) என்றும், உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட நான்கில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறுகிறது என்றும் குறிப்பிடுகிறது அவ்வறிக்கை.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, உலகம் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறியே இல்லை என்றும் கவலையுடன் உரைக்கிறது அவ்வறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்