மத்திய ஆபிரிக்காவில் 30 இலட்சம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நெருக்கடி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்றையச் சூழலில், மத்திய ஆபிரிக்கக் குடியரசின் 30 இலட்சம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நெருக்கடிகள் மற்றும் துயரங்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர் என்று கூறியுள்ளது யுனிசெப் நிறுவனம்
ஜூலை 2, இச்செவ்வாயன்று, இத்தகவலை அறிக்கையொன்றில் வழங்கியுள்ள அந்நிறுவனம், மத்திய ஆபிரிக்கக் குடியரசில் கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல் மற்றும் உறுதியற்ற தன்மையால் இப்படியொரு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2 குழந்தைகளில் ஒருவருக்கு நல சேவைகள் கிடைப்பதில்லை என்றும், மூன்றில் ஒரு பங்கு (37%) குழந்தைகள் மட்டுமே தவறாமல் பள்ளிக்குச் செல்கின்றனர் என்றும் குறிப்பிடும் அவ்வறிக்கை, மூன்று இளம் பெண்களில் ஏறக்குறைய இருவர் (61%) 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்றும், நாட்டின் ஏறத்தாழ 40 விழுக்காட்டு குழந்தைகள் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.
மேலும் பலவீனமான நிறுவனங்கள் மற்றும் வன்முறையின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் யாவும், குழந்தைகளின் உரிமைகளுக்கான பல ஆபத்துகளை அதிகரிக்கின்றன என்று உரைக்கும் அவ்வறிக்கை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என்றும், அவர்கள் வலிகளும் இழப்புகளும் அதிகமாகிவிட்டன என்றும் எடுத்துக்காட்டுகின்றது.
இருப்பினும் இந்த முக்கியமான வேளையில், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் குழந்தைகளின் போக்கை மாற்றுவதற்கு அனைத்துலக சமூகம் அணிதிரள வேண்டிய தருணம் இது என்றும், அதற்கான நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்