தேடுதல்

வெப்ப அலைகளால் தங்களைக் குளிராக்கிக்கொள்ளும் குழந்தைகள் வெப்ப அலைகளால் தங்களைக் குளிராக்கிக்கொள்ளும் குழந்தைகள்   (AFP or licensors)

ஐரோப்பா, மத்திய ஆசியாவில் குழந்தைகள் உயிரைப் பறிக்கும் வெப்ப அலைகள்!

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் ஆண்டுக்கு 400 குழந்தைகள் இறக்கின்றனர் : யுனிசெஃப் காலநிலை அறிக்கை

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

ஜூலை 24, இப்புதனன்று, யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள 23 நாடுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள புதிய ஆய்வறிக்கையில், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் 2021-ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 377 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள குழந்தைகளில் பாதி பேர் அதாவது, 9 கோடியே 20 இலட்ச குழந்தைகள் உலகளவில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வரும் மாநிலத்தில் ஏற்கனவே அடிக்கடி வெப்ப அலைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் வெப்ப அலைகளுக்கு மத்தியில் பிறந்த குழந்தைகளில் பாதி பேர் வாழ்க்கையின் முதல் ஆண்டில்  வெப்பம் தொடர்பான நோய்களால் தாக்கப்பட்டு இறந்ததாகவும், பெரும்பாலான குழந்தைகள் கோடை மாதங்களில் இறந்தன என்றும் குறிப்பிடுகிறது அவ்வறிக்கை.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மாநில இயக்குநர் ரெஜினா டி தொமினிசிஸ் அவர்கள், அதிகரித்து வரும் அதிக வெப்பநிலை குழந்தைகளுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு, குறுகிய காலத்திற்குள் கூட கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், சிகிச்சையின்றி இந்தச் சிக்கல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் வெப்ப வெளிப்பாடு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று எடுத்துக்காட்டியுள்ள தொமினிசிஸ் அவர்கள், வெப்ப அழுத்தம் குழந்தை இறப்புக்கு நேரடி காரணமாகும் என்றும், இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கலாம் மற்றும் குழந்தை நோய்களின் வரம்பிற்கு வழிவகுக்கலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 12:56