அதிக எண்ணிக்கையில் கிரீஸ் நாட்டில் புலம்பெயர்ந்தோர் குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிரீஸ் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம் என்றும், அவர்களில் நான்கில் ஒருவர் குடும்ப உறுப்பினர்கள் அல்லது காப்பாளர் இல்லாமல் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.
இந்தக் குழந்தைகள் நல அமைப்பும் புலம்பெயர்ந்தோருக்கான கிரேக்க அமைப்பும், அவர்கள் நாட்டில் தங்கிய முதல் நாளிலிருந்தே துணையில்லாத சிறார்களுக்கு ஒரு காப்பாளர் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யவும், குழந்தைகள் பாதுகாப்புச் சேவைகளுக்கு நிதியளிக்கவும், ஐரோப்பாவில் பாதுகாப்பைத் தேடும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளன.
இவ்வாண்டு 6,400-க்கும் மேற்பட்ட குழந்தை புலம்பெயர்ந்தோர் கிரேக்க நாட்டிற்குள் வந்துள்ளனர் என்றும், இது 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அவ்வமைப்பு.
கிடைத்திருக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், ஏறத்தாழ 5,580 குழந்தைகள் ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவுகளுக்கு கடல் வழியாக வந்துள்ளனர் என்று உரைக்கும் அந்நிறுவனம், இவர்களில் ஏறக்குறைய 830 பேர் தரைவழியாக வந்துள்ளனர் என்றும், 2023 -ஆம் ஆண்டு முதல் பாதியில் குடியேறிய 1,280 குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இது 400 விழுக்காடு அதிகரித்ததுள்ளது என்றும் கூறியுள்ளது.
ஆபத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களைக் காப்பாற்ற 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு, அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துதல், போர் மற்றும் பட்டினியால் இடம்பெயர்ந்து செல்லும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு அளித்தல் ஆகிய நற்பணிகளை ஆற்றி வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்