தேடுதல்

ஜூலை 25, மனித வர்த்தகத்திற்கு எதிரான நாள் ஜூலை 25, மனித வர்த்தகத்திற்கு எதிரான நாள்   (Siam Pukkato)

நவீன அடிமைத்தனத்தில் ஏறத்தாழ 1 கோடியே 20 இலட்சம் குழந்தைகள்!

கடத்தல் மற்றும் சுரண்டலைக் கருத்தில் கொண்டு, நோய்தொற்று ஆண்டான 2020-இல், UNODC வெளியிட்ட தரவுகளின்படி, உலகளவில் 53,800 பேர் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்கள் பனிப்பாறையின் நுனியை மட்டுமே குறிக்கின்றன - உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடத்தல் மற்றும் சுரண்டல் போன்ற பல்வேறு வகையான நவீன அடிமைத்தனத்தில் ஏறத்தாழ 1 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

ஜூலை 25, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு எடுத்துக்காட்டியுள்ள அவ்வமைப்பு, ஐரோப்பாவில், கடந்த 5 ஆண்டுகளில் (2017-2021) பாலியல் மற்றும் தொழிலாளர் சுரண்டலுக்கான கடத்தல்களால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 29,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் 16 விழுக்காட்டினர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் உரைக்கிறது.

ஜூலை 25, இன்று மனித வர்த்தகத்திற்கு எதிரான அனைத்துலக தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 'சிறிய கண்ணுக்குத் தெரியாத அடிமைகள்' என்ற அறிக்கையின் 14- வது பதிப்பில் இவ்வாறு கூறியுள்ளது. மேலும்  இதன் வழியாக, ஒரு மறைக்கப்பட்ட நிகழ்வின் மீது கவனத்தைத் திருப்புகிறது மற்றும் சிறார்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது இவ்வமைப்பு.

உலகெங்கிலும் ஏறக்குறைய 5 கோடி மக்கள் பல்வேறு வகையான நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 1 கோடியே 20 இலட்சதிற்கும் அதிகமானோர் சிறார்களாக உள்ளனர் என்றும், முக்கியமாக, கட்டாய உழைப்பு வடிவங்களில் பாலியல் சுரண்டல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கட்டாயத் திருமணங்கள் வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றது அவ்வமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 14:07