தேடுதல்

உக்ரைன் தாக்குதலில் காயமடைந்த பெண்மணி உக்ரைன் தாக்குதலில் காயமடைந்த பெண்மணி   (ANSA)

உக்ரைனில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனைக்கு முதல் உதவி!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மிகப்பெரும் குழந்தைகள் மருத்துவமனை உட்பட இரு மருத்துவ மையங்கள் தாக்கப்பட்ட வேளை, இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் உடனடித் தேவைகளுக்கு யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் உதவி வருகின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூலை 9, இத்திங்களன்று, உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் தாக்குதலுக்கு உள்ளான Okhmatdyt குழந்தைகள் மருத்துவமனைக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாக அதன் எக்ஸ் தல பக்கத்தில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

அவசர உடல் நலம் மற்றும் முதலுதவி பெட்டிகள், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள், குடிநீர், மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு, நல கருவிகள், பொழுதுபோக்கு கருவிகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருள்களை வழங்கியுள்ளதாகவும் அதன் எக்ஸ் தல பக்கத்தில் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் துணைவர்களுடன் (partners) இணைந்து மற்ற உடல் நல வசதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட குழந்தைகளின் தேவைகளை அடையாளம் கண்டு ஆதரிக்கவும், சேதமடைந்த மருத்துவமனை மற்றும் அண்மைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிற சமூகங்களுக்கு மேலும் அவசர உதவிகளை வழங்கவும் யுனிசெப் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அதன் எக்ஸ் தல பக்கம் உரைக்கிறது.

குழந்தைகள், பொதுமக்கள், சேவைகள் மற்றும் அத்தியாவசிய வசதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் உடனடித் தேவைகளுக்கு யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள்  உதவி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள யுனிசெஃப் நிறுவனம், எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு நிலையான அமைதி தேவை என்றும் அதில் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2024, 14:56