ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி பற்றாக்குறை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 1,23,000 குழந்தைகள் வழக்கமான தடுப்பூசியைப் பெறவில்லை என்று உலக நல நிறுவனம் மற்றும் யுனிசெப் வெளியிட்ட தேசிய நோய்த்தடுப்பு பற்றிய அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜியம் டோஸ் குழந்தைகள், அதாவது வழக்கமான தடுப்பூசிகள் எதுவும் பெறாதவர்கள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பிற அத்தியாவசிய சேவைகளை இழக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும் என்றும் கவலை தெரிவித்துள்ளது .
ருமேனியா, உக்ரைன், அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் 51 விழுக்காடு (192,000) தடுப்பூசி போடப்படாத அல்லது குறைவான தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் உள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அவ்வறிக்கை.
மேலும் தட்டம்மை தடுப்பூசி போடும் மொத்த அளவு குறைந்து வருகிறது என்றும், மாண்டினீக்ரோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, வடக்கு மாசிதோனியா மற்றும் ருமேனியாவின் தடுப்பூசி போடும் மொத்த விகிதங்கள் 80 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளன என்றும் அதன் அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மாநிலத் நோய்த்தடுப்பு நிபுணர் பாத்திமா செங்கிக் அவர்கள், "எங்கள் பகுதியில் தடுப்பூசி வழங்கும் மொத்த அளவு படிப்படியாக குறைந்து வருவதையும், பல குழந்தைகள் உயிர்காக்கும் தடுப்பூசிகளைப் பெறுவதில்லை என்பதையும் இந்த மதிப்பீடுகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களால் குழந்தைகள் இறக்கும் ஆபத்தில் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ள செங்கிக் அவர்கள், நோய்த்தடுப்பு திட்டங்கள் மற்றும் நல அமைப்புகளில் நிதி மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட, அவசர நடவடிக்கை அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்