தேடுதல்

இத்தாலியில் குடியேற முயன்றோரின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோரின் சவப்பெட்டிகள் இத்தாலியில் குடியேற முயன்றோரின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோரின் சவப்பெட்டிகள்  (ANSA)

வாரம் ஓர் அலசல் - ஜூலை 30.-ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம்

ஜூலை 30ல், ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை நாம் சிறப்பிக்கவிருக்கும் வேளையில், இக்கொடுஞ்செயலுக்கு எதிராக நாம் செய்யவேண்டியது என்ன?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்று திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள். இன்றும் திரைகடலில் வியாபாரம் நடக்கிறது. அதில் ஒரு பகுதிதான் மனித வியாபாரம். மனிதனால் செய்யப்பட்ட வியாபாரம் இன்று மனிதனையும் மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படுகிறது. ஆம். மனிதனை வியாபாரப் பொருளாகக் கடத்தி, வியாபாரம் செய்வதைத்தான் கூறுகிறோம்.

மனித கடத்தல் என்பது அனைத்து பாலினம், வயது, இனம் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் இலவச உழைப்பு மற்றும் பாலியல் செயல்களுக்காக வாங்கப்பட்டு விற்கப்படும் வழிமுறையாகிவிட்டது இன்று. தெளிவாகச் சொன்னால், இது ஒரு வகையான அடிமைத்தனம். மிகவும் ஆபத்தில் இருப்பவர்கள் பெண்கள், குழந்தைகள், பதின்ம வயதினர், வீடற்ற நபர்கள், மற்றும் புலம்பெயர்ந்தோர். சில சமயங்களில் மனித கடத்தலுக்கு தாங்கள் பலியாவதை மக்கள் உணர மாட்டார்கள். மற்ற சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் உதவியை அடைய முடியாமலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும் வாழ்கின்றனர்.

அனைத்து மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. சித்திரவதைக்கும், மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் கொண்டுள்ளதோடு, பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள். ஆனால் உலகில் நடப்பதென்ன? இன்று கொழித்து வளரும் வியாபாரம் மனித கடத்தல்.

2006ஆம் ஆண்டில், அதாவது இன்றிலிருந்து 18 ஆண்டுகளுக்கு முன்னர், 20 வயது இளைஞனாக, ஒரு லாரி மூலமாக இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் பர்ஸான் மஜீத் என்பவர். ஓர் ஆண்டு கடந்து, இங்கிலாந்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூடுதலாக பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதில் சில ஆண்டுகளை துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் கழித்தார். அதன்பின் 2015இல் ஈராக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். ஏனெனில் இவர் ஒரு குர்திஷ் ஈராக்கிய மனிதர். இதற்குப் பிறகு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மூத்த சகோதரரிடமிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்திற்குள் கடத்தும் தொழிலை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. 2016 மற்றும் 2021க்கு இடையில், ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மக்கள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும்பகுதியை மஜீத்தின் கும்பல் தன் கைக்குள் வைத்திருந்ததாக அறியப்படுகிறது. இரண்டு வருட சர்வதேச காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த கும்பலைச் சேர்ந்த 26 உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அக்டோபர் 2022இல், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 8,34,000 பவுண்டுகள், அதாவது, இந்திய மதிப்பில் 8 கோடியே 72 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போதிருந்து, அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார்.

ஏழை நாடுகளில் இருந்து வரும் மக்களை பணக்கார நாடுகளுக்கு கொண்டு செல்ல உதவி அதில் பணம் சம்பாதிப்பதுதான் மஜீத் செய்யும் தொழில். ஏறக்குறைய 12 பேரை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்ற படகுகளில் 100 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கூட்டம்கூட்டமாக ஏற்றி பயணம் செய்ய வைப்பது இவர் பாணி. படகுகள் பெரும்பாலும் படகோட்டும் அனுபவம் இல்லாத கடத்தல்காரர்களால் இயக்கப்படும். கடலோர காவல்படை ரோந்துகளைத் தவிர்ப்பதற்காக சிறிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆபத்தான பாதையில் செல்லும். இந்த படகுகளில் ஓர் இடத்திற்கு பயணிகள் தலா 10,000 யூரோக்கள், அதாவது ஏறக்குறைய 9 இலட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 7,20,000க்கும் அதிகமான மக்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஏறக்குறைய 2,500 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் இந்த மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்களின் கவலை பணத்தைப் பற்றி மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் வாழ்வு பற்றி அல்ல. இந்த ஆள்கடத்தல் ஐரோப்பிய பகுதிகளில் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு குற்றக்கும்பல்களின் மனசாட்சியற்ற செயல்களால், அடைக்கலம் தேடிவரும் அப்பாவி மக்கள் கடலில் மூழ்கி மடிவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவ்வுலகில் ஆள் கடத்தல் தொடர்புடைய வேறு சில சம்பவங்களையும் ஓர் உதரணத்திற்கு இப்போது முன்வைக்கிறோம்.

மெக்சிகோவிலிருந்து மூடப்பட்ட கனரக வாகனம் ஒன்றில் சீனாவைச் சேர்ந்த 11 பேர் பதுங்கியிருந்தனர். சான் தியாகோ நகரில் சான் சிட்ரோ எல்லையில் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சலவை இயந்திரத்தில் சிலர் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பிரிட்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் 25 சட்டவிரோத குடியேறிகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்தது.

லாரி ஒன்றிலிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் 39 வியட்நாமியர்களின் உயிரிழந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் நாம் அறிந்ததுதான். குளிர்பதனப்படுத்தப்பட்ட இந்த லாரியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் தொடர்பான சம்பவம் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏழைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு, ஐரோப்பாவிற்குள் அனுமதியின்றிக் குடியேறும் முயற்சிகளில் ஈடுபடுவோர், தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அத்துடன், ஆள்கடத்தல் கும்பல்கள் வறுமையில் வாடுவோரை ஆசை காட்டி வேறு நாடுகளுக்குக் கடினமான வேலைகளுக்காக கடத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது.

5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கம்போடியாவில் ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் ஓர் ஆண்டாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

இது பன்னாட்டு அளவில் நடக்கும் மனித கடத்தல்கள். ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடப்பதென்ன?

கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி பலர் சொத்துகளை இழப்பதும், இன்னும் சிலர் தற்கொலை செய்கின்ற கொடுமையும் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும் அதேவேளையில்,

கடன் பெற்றவர்களை கந்துவட்டி கும்பல் கடத்தி துன்புறுத்துவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க 2003ல் தமிழக அரசு கொண்டு வந்த கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாமலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாலும்தான் கந்துவட்டிக்காரர்கள் துணிச்சலாக செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

இந்த வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கூறும்போது, ``நான் ஒருவரிடம் தொழிலுக்காக கடன் வாங்கியிருந்தேன். பிரச்னை எற்பட்டதால் என்மீது ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்தார். கடந்த மே 29ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு சென்று, 10 நாள்களில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகக் கூறிவிட்டு வந்தேன். ஆனால், ஜூன் 7ஆம் தேதியே 10 பேருடன் என் வீட்டுக்குள் அராஜகமாக நுழைந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை என்னை சித்ரவதை செய்த பிறகு, நான் அவர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்து வைத்திருந்த 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் 5 பவுன் நகை, 3 செல்போன்களையும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு, என்னுடைய காரில் மனைவி மகளை ஏற்றிக் கொண்டவர்கள், என் கண்களை கட்டி அவர்களுடைய காரில் கொண்டு சென்று, ஓரிடத்தில் நிறுத்தி கடுமையாக தாக்கினார்கள். மயங்கி விழுந்த என்னை கடுமையாக சித்ரவதை செய்து பின்பு அப்பல்லோ மருத்துவமனையில் போட்டுவிட்டுச் சென்றார்கள். அதன் பின்பு ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்ததில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களைக் கைதுசெய்யவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளேன். தற்போது தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்" என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,714 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் தலா 184 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் பெண்கள் கடத்தல் தொடர்பானவை ஆகும். பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உடல் உறுப்புகளுக்காகவும் பலர் கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தப்பட்டு யாசகம் கேட்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு, ‘2022 டிராஃபிக்கிங் இன் பெர்சன்ஸ்’ (Trafficking in persons) எனும் தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, ஆள் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச முயற்சியைக் கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசு அதிகாரிகளை விசாரித்ததாகவோ, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதாகவோ அல்லது அவர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ தெரிவிக்கக் கூடிய எந்தவிதமான அதிகாரப் பூர்வ சான்றுகளையும் அரசாங்கம் பதிவு செய்து வைத்திருக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கை, ஆள்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் தேசிய செயல்திட்டத்தை (என்ஏபி) இந்தியா இப்போது வரை புதுப்பிக்கவே இல்லை என்பதோடு, பலாத்காரம், மோசடி அல்லது வற்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தரக்கூடிய வகையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 370வது பிரிவு திருத்தியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கிறது.

2020ஆம் ஆண்டில் 5,156 பேர் கடத்தப்பட்டு அதில் 2,837 பேர் கொத்தடிமைகளாகவும், 1,466 பேர் பாலியல் தொழிலாளர்களாகவும் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல். ஆனால் கடத்தப்பட்டவர்களில் 694 பேர் என்னவானார்கள் என்பது குறித்து அரசிடம் போதுமான தகவல் பதிவுகள் எதுவும் இல்லை.

பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் இங்கு கொத்தடிமைத் தொழிலுக்காகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுதியாகக் கடத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜூலை 30ல் ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை நாம் சிறப்பிக்கவிருக்கும் வேளையில், இம்மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலுக்கு எதிராக நாம் செய்யவேண்டியது என்ன? சிந்தித்துச் செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2024, 12:43