தேடுதல்

நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - ஜூலை 18. நெல்சன் மண்டேலா தினம்

கறுப்பின மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த மண்டேலா, 2013 டிசம்பர் 5ல் காலமானார். அவர் பிறந்த ஜூலை 18, `மண்டேலா தினமாக’ சிறப்பிக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சில நாட்களுக்கு முன்னால் யூடியூப்பில் ஒரு பேட்டியெடுப்பவர் மாணவர்களிடையேச் சென்று ஆங்கிலத்தில் நம் தேசத் தந்தை யார் என்று கேட்கிறார். இது வட இந்தியாவில் நடந்தது என நினைக்கிறோம். மாணவர்கள் எவரும் சரியான பதிலைக் கூறவில்லையா அல்லது எடுத்தவர்  சரியான பதில்களைக் கத்தரித்துவிட்டு தவறான பதிலை மட்டும் நமக்குக் காண்பித்துள்ளாரா என்பது தெரியவில்லை. பல மாணவர்களின் பதில்கள் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன. சிலர் நரேந்திர மோடி என்றும், சிலர் தெரியாது எனவும், ஒருவர் வல்லபாய் பட்டேல் என்றும்,மற்றொருவர் அம்பேத்கார் என்றும், ஒரு மாணவி தில்லி எனவும் பதில் தந்தபோது நமக்கு வாயடைத்துவிட்டது. எங்கே இந்த இளைய சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. பிரதமரையும் இரும்பு மனிதரையும் முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்திய நிலையில் தேசத்தந்தையை மறந்துவிட்டோமா என கேட்கத் தோன்றுகிறது. இந்த எண்ணம் ஏன் வந்தது என்றால் இவ்வாரம் அதாவது ஜூலை 18 ஆம் தேதி நாம் தென்னாப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா தினத்தைச் சிறப்பிக்கிறோம். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு அகிம்சையை தன் வழியாக ஏற்ற மண்டேலாவை உலகமே சிறப்பிக்கும் வேளையில், தன் தேசத்தந்தையின் முக்கியத்துவத்தை இந்தியாவே மறந்து வருவது அவமானமாக இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் அகிம்சை வழியில் அடிமைச் சங்கிலியை உடைந்தெறிந்த மாபெரும் தலைவரான நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் பிறந்த ஜூலை 18ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக கொண்டாடப்படுகிறது.

தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் அகிம்சை வழியில் போராடிய நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்திக்கு பிறகு அறவழி போராட்டத்தின் அடையாளமாக இன்றளவும் பார்க்கப்படுகிறார். நெல்சன் மண்டேலாவின் அகிம்சை வழி போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொது அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா அனைத்துலக தினமாகக் கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 92வது பிறந்த தினமாகும்.

மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் மற்றும் சர்வதேச சமாதானத்தை ஊக்குவிப்பவர் என்று பல முகங்கள் கொண்ட நெல்சன் மண்டேலா சிறுவயதிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்து இளைஞர் லீக்கின் தலைவராக ஆனார். 1939ஆம் ஆண்டு, தனது 21வது வயதில், அடிமைப்பட்டுக்கிடந்த தென்னாப்பிரிக்க இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைத்தார். "கறுப்பின மக்களாகிய நாம் அடக்கப்படுகிறோம். நமக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. நாம் பயணம் செய்வதற்கு நம் நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக நம் கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சொந்த மக்களுக்கு எதிரானவை, நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என போர்க்குரல் எழுப்பினார். 1948ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தென்னாப்பிரிக்காவில் ஆட்சிப்பொறுப்பேற்ற புதிய அரசு, கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை மேலும் கட்டவிழ்த்துவிட்டது. புதிய சட்டங்களை கொண்டுவந்து மக்களை ஒடுக்கியது. இன மற்றும் நிற அடிப்படையில் பிரித்து, கறுப்பின மக்களைத் தனியாகக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது. அரசின் சட்ட முறையிலான அடக்குமுறையை எதிர்த்து, மண்டேலா தனது கல்லூரி நண்பரான ஒலிவர் ரம்போவுடன் இணைந்து 'ஆப்ரிக்கன் லீகல் பார்ட்னெர்ஷிப்' (African Legal Partnership) என்ற கறுப்பின மக்களுக்கான சட்ட அமைப்பை நிறுவினார். இதன் மூலம், அரசால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு சட்ட ஆலோசனையையும், உதவியையும் வழங்கினார். நெல்சன் மண்டேலாவின் தொடர்ச்சியான அறப்போராட்டங்களால் அதிர்ந்துபோன அரசாங்கம், 1956ஆம் ஆண்டு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தது. நான்காண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த மண்டேலா, இன்னும் தீவிரமாக மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். 1960ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் ஒரு மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஏழாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடி நடத்தப்பட்ட அகிம்சைவழிப் போராட்டத்தை, வெள்ளை ஆதிக்க இனவெறி அரசு வன்முறையின் மூலம் ஒடுக்கியது. அமைதியான முறையில் போராடிய மக்கள்மீது, அரசின் காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல், மண்டேலாவின் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதுவரையில், அமைதி வழியைப் பின்பற்றி அறப்போராட்டத்தை நடத்தி வந்த மண்டேலா, ஆயுத வழிப் போராட்டத்தைக் கையிலெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த சூழலை அரசே உருவாக்கியது. 1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஓர் அங்கமாக, 'தேசத்தின் ஈட்டி' (Spear of the Nation) என்ற ஆயுதபாணி இயக்கத்தைத் தொடங்கினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், அரசால் தடை செய்யப்பட்டது. மண்டேலாவையும் அவரது கூட்டாளிகளையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவர்களைக் கைதுசெய்யும் முயற்சியில் காவல்துறையினரை அனுப்பியது அரசு. மண்டேலாவும் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டபடியே, அரசுக்கு எதிரான தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்தார். அந்த நிலையில், 1963ல் வால்டர் சிசுலு உட்பட 7 பேர் காவல் துறையால் அரசுக்கு எதிரான இரகசிய திட்டத்தில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார்கள். அந்த வழக்கில் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வந்த மண்டேலாவும் இணைத்துக்கொள்ளப்பட்டார். உலக நாடுகளின் அழுத்தத்தையும் மீறி 1963ஆம் ஆண்டு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து Robben தீவிற்கு நெல்சன் மண்டேலாவும் இரண்டு சகாக்களும் கொண்டுசெல்லப்பட்டார்கள். நெல்சன் மண்டேலாவுக்கு, கல்லுடைக்கும் வேலை வழங்கப்பட்டது.

தன் நாட்டு மக்களுக்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார் மண்டேலா. மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என யாரையும் சந்திக்கவிடாமல் தடுத்தது அரசு. 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் தனது 27 ஆண்டு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு விடுதலையான மண்டேலா என்னும் அந்த மகத்தான மாமனிதரின் உலக நாளை சிறப்பிக்கவுள்ளோம். அவர் சிறை செல்லும்போது அவரது மகளுக்கு வயது 3, சிறையிலிருந்து வெளியேறுகையில் அவரின் மகளுக்கு வயது 30.

1994ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட மண்டேலா வெற்றி பெற்றார். தென்னாப்பிரிக்காவின் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அரசுத்தலைவராக நெல்சன் மண்டேலா பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இந்திய வம்சாவளியினர், கறுப்பினத்தவர் என அனைவருக்கும் இடம் கொடுத்து இனவேற்றுமைகளை நீக்கினார். நட்புறவை வளர்க்கும் விதமாக 1995ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். மண்டேலா அரசுத்தலைவராக இருந்தபோது, அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் பல்வேறு மறுமலர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார். 1999ஆம் ஆண்டு அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகியவர், அரசியல் சாயமின்றி மக்களுக்கான நலப்பணிகளைத் தொடர்ந்தார்.

உலக அமைதிக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு அமைதி விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லி வந்து அந்த விருதைப் பெற்றார். 1990ல் இந்தியாவின் `பாரத ரத்னா` விருதும் வழங்கப்பட்டது. 1993ல் உலக அமைதிக்கான நோபல் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 2007 ஆகஸ்ட் 30ல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. நெல்சன் மண்டேலாவுக்கு உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தன. அந்த வகையில் ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார். கறுப்பின மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மண்டேலா, 2013 டிசம்பர் 5ல் தனது 95ஆம் வயதில் இறைபதம் சேர்ந்தார். அவர் பிறந்த தினத்தை 2009 முதல் உலக நாடுகள் சபை `மண்டேலா தினமாக’ அறிவித்து பின்பற்றிவருகிறது.

அந்த மாமனிதர் பற்றி நினைக்கும்போது, அண்ணல் காந்தியும் நினைவுக்கு வருகிறார். இவர்கள் இருவரிடமும் இருந்த பல அரிய குணங்களுள் முன்னணியில் இருப்பது, உறுதியான நம்பிக்கையும் விடாமுயற்சியும். இனவெறிக்கு எதிராகப் போராடிய இவர்கள் இருவரும் தோல்விகளால் சோர்ந்து விடவில்லை, இவர்களை சிறைக்கம்பிகளால் முடக்க முடியவில்லை.

"விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல பெருமை, விழும்போதெல்லாம் எழுந்தோம் என்பது தான் வாழ்வின் பெருமை" என்று கூறிய மண்டேலாதான், "எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்" என்று மற்றவர்களுக்கு ஊக்கமூட்டினார். இந்த பின்னணியில் நிற்கும் நாம், அண்மையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஆனால், இந்தியாவில்தான் இன்று அதிக அளவில் தற்கொலைகள் இடம்பெறுவதாக வந்த செய்தியோடு மண்டேலாவின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு 1,71000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை விகிதம் 1,00,000-க்கு 12.4 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச தற்கொலை விகிதம் ஆகும். இவ்வாறு உலகத்திலேயே இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உலகிலேயே அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியாதான். இதேபோல் ஆண்டுதோறும் 6 கோடி பேர் மருத்துவ தேவைகளுக்கு செலவு செய்தே வறுமை கோட்டுக்கு கீழ் சென்று விடுகிறார்கள். இதனாலும் தற்கொலை அதிகமாக நடக்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும் நாம் மனம் தளர்ந்து தற்கொலையை நாடினால் மக்களுக்காக போராடவேண்டிய நல்ல தலைவர்களை உலகம் இழந்துவிடும். மக்களின் ஒட்டுமொத்த உரிமைக்காக போராடிய தலைவர்கள் சந்திக்காத தோல்விகளா?. 27 ஆண்டுகள் வெளியுலக தொடர்பின்றி இருந்த நெல்சன் மண்டேலா மனம் தளர்ந்திருந்தால் தென்னாப்ரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்திருக்காது. அண்ணல் காந்தி மனம் தளர்ந்திருந்தால் பாரதம் சுதந்திரம் அடைந்திட மேலும் பல ஆண்டுகள் சென்றிருக்கலாம்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், அநீதிகளுக்கு அடிபணியாமல், நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்திட துணிந்து நடைபோடுவோம். நமக்கு முன்சென்ற நல்ல தலைவர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2024, 13:42