தேடுதல்

இந்தியாவின் கடைவீதி ஒன்று இந்தியாவின் கடைவீதி ஒன்று  (ANSA)

வாரம் ஓர் அலசல் - ஜூலை 11. உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11, 1989 அன்று துவக்கப்பட்டு இவ்வாண்டு, அதாவது, 2024இல், உலகம் அதன் 35வது மக்கள்தொகை தினத்தை சிறப்பிக்க உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலக மக்கள் தொகை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டும், இவ்வாரம் வியாழக்கிழமையன்று நினைவு கூரப்படுகின்றது.

மக்கள்தொகை பிரச்சினைகள், மனித வாழ்க்கை மற்றும் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களில் அவற்றின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. கடந்த சில பத்தாண்டுகளாக உலக மக்கள்தொகையில் விரைவான அதிகரிப்பு பல்வேறு சவால்களுக்கு வழிவகுத்தது, இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முக்கியமானது என்பதும் நோக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், வறுமை ஒழிப்பு, தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்ட மக்கள்தொகை தொடர்பான கவலைகள் குறித்த மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த உலக மக்கள்தொகை தினம்.

ஐ.நா.வின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் பெண்கள் 49.7% ஆக உள்ளனர், இருப்பினும் மக்கள்தொகைக் கொள்கைகளில் அவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, மக்கள்தொகை பற்றிய விவாதங்களில் பெண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேவேளை, குழந்தை பிறப்புகால மரணங்கள் 2000மாம் ஆண்டிலிருந்து 34 விழுக்காடு குறைந்துள்ளது. இருப்பினும் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட கர்ப்பகாலத்திலும் குழந்தை பிறப்பின்போதும் ஒவ்வொரு நாளும் 800 அன்னையரின் உயிர் தேவையின்றி இழக்கப்படுகிறது.

உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11, 1989 அன்று துவக்கப்பட்டு இவ்வாண்டு, அதாவது, 2024இல், உலகம் அதன் 35வது மக்கள்தொகை தினத்தை சிறப்பிக்க உள்ளது.

மனிதன் விவசாயத்தை முதன் முதலில் கையிலெடுத்த கி.மு. 8000மாம் ஆண்டில் 50 இலட்சமாக இருந்த உலக மக்கள் தொகை 1804ஆம் ஆண்டு 100 கோடியாக உயர்ந்தது. 1930ல் 200 கோடி, 60ல் 300 கோடி, 74ல் 400 கோடி, 87ல் 500 கோடி, 98ல் 600, 2010 இறுதியில் 700, 2022ல் 800, இன்று 812 கோடி என உயர்ந்து, 2037ல் 900 கோடியையும், 2058ல் 1000 கோடியையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 7கோடியே 30 இலட்சம் என்ற விகிதத்தில் மக்கள் தொகை பெருகிவருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் 4.2 பேர் பிறக்கிறார்கள், 1.8 பேர் இறக்கிறார்கள். 2050ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர்  நகரங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் சராசரி வயது 32 ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060ம் ஆண்டு 39 ஆக உயரும். கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.

ஜுலை மாதல் 8ஆம் தேதி, அதாவது நீங்கள் இந்த நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நாளில் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு உலக மக்கள் தொகை 812 கோடியே 5 இலட்சத்தைத் தாண்டியது. இந்த ஆண்டில் இதுவரை பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 கோடியே 96 இலட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இறப்புக்களின் எண்ணிக்கையோ, அதே ஜூலை 7ன் கணிப்பின்படி 3 கோடியே 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதாவது, இவ்வாண்டின் இறப்புக்கள், பிறப்பின் எண்ணிக்கையை விட பாதிக்கும் குறைவே. அதாவது, மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தியே. அதேவேளை இன்றைய நவீன உலகில் குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. 1974ஆம் ஆண்டு உலகில் தற்போதைய எண்ணிக்கையில் பாதியே இருந்தனர், அதாவது 400 கோடி, அதே எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 800 கோடியை எட்டியது. 48 ஆண்டுகளில் இரு மடங்காகிய மக்கள்தொகை, தற்போதைய எண்ணிக்கையிலிருந்து இரு மடங்காக வேண்டுமெனில் 200 ஆண்டுகளுக்கு மேலாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆசியா பக்கம் கொஞ்சம் திரும்புவோம். ஆசியாவில் இன்று 475 கோடியே 30 இலட்சத்திற்கும் மேல் மக்கள் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 59.1 விழுக்காடு. அதற்கடுத்து அதிக மக்கள் தொகையைக் கொண்ட கண்டமாக ஆப்ரிக்கா வருகிறது. இங்கு உலக மக்கள் தொகையில் 18.2 விழுக்காடினரே வாழ்கின்றனர்.

அடுத்து ஐரோப்பாவில் உலக மக்கள் தொகையில் 9.2 விழுக்காடும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 8.3 விழுக்காடும், வட அமெரிக்காவில் 4.7 விழுக்காடும் ஓசியானியாவில் 0.6 விழுக்காடும் உள்ளனர்.

இப்போது ஆசியாவில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு என்று பார்த்தோமானால் முதலில் இந்தியாவும் அடுத்து சீனாவும் ஒன்றுக்கொன்று நெருங்கித் தொட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இன்று 144 கோடியே 20 இலட்சமும், சீனாவில் 142 கோடியே 51 இலட்சமும் மக்கள் உள்ளனர். உலக அளவில் எடுத்துக்கொண்டோமானால் இந்தியா மற்றும் சீனாவிற்கு பிறகு 34 கோடியே 18 இலட்சத்தைக் கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடும், 27 கோடியே 98 இலட்சத்தைக் கொண்டு இந்தோனேசியாவும் 24 கோடியே 53 இலட்சத்தைக் கொண்டு பாகிஸ்தானும் வருகின்றன. அடுத்து வரிசையாக நைஜீரியா, பிரேசில். பங்களாதேஷ், இரஷ்யா, மெக்சிகோ, எத்தியோப்பியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ், எகிப்து, கோங்கோ குடியரசு, வியட்நாம், ஈரான், துருக்கி, ஜெர்மனி, தாய்லாந்து ஆகியவை வருகின்றன.

நம்மில் சிலருக்கு இப்போது ஒரு கேள்வி ஆர்வத்தின் பலனாக பிறக்கலாம். அதாவது, இதுவரை இந்த உலகில் எத்தனை கோடி பேர் வாழ்ந்துள்ளனர் என்ற கேள்விதான் அது. மனிதன் முழுமையடைந்து அறிவுடையவனாக, இன்றைய மனிதனை ஓரளவு பிரதிபலிக்கும் வகையில் வாழ்த்துவங்கியது கி.மு.50,000 ஆண்டிலிருந்து என கணிக்கப்படுகிறது. மனிதன் பல இலட்சம் ஆண்டுகளாக இவ்வுலகில் வாழ்ந்து வந்தாலும் கி.மு. 50 ஆயிரத்திலிருந்துதான் முழு மனிதன் என்ற கணக்குகள் துவங்குகின்றன. ஆகவே அந்த கணிப்பின்படி, இன்று வரை இந்த உலகில் 10 ஆயிரத்து 600 கோடி மக்கள் பிறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. அப்படிப் பார்த்தோமானால், இன்றைய உலகில் இருப்பது மொத்த மக்களுள் 6 விழுக்காடுதான். ஆனால் சிலர், இந்த உலகில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை நாலாயிரத்து 500 கோடி முதல் 12 ஆயிரத்து 500 கோடி வரை இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.

  உலக அளவில் மக்கள் தொகைப் பெருக்கம் இடம்பெற்றுவருவதால், இட நெருக்கடியும் அதிகரித்துவருகிறது. 1955ல் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 18 பேர் வாழ்ந்திருக்க, இதுவே 2000மாம் ஆண்டில் 41 என மாறி, 2024ல் 55 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2025 ஆம் ஆண்டில் 65 ஆக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 17.8 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 481 பேர் வாழ்கின்றனர். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 36.3 விழுக்காட்டினர் நகர்களில் வாழ்கின்றனர். பங்களாதேஷிலோ ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1329 என்ற அளவில் மக்கள் வாழ்கின்றனர்.

இப்போது மக்கள் தொகை நாள் குறித்து சிந்திக்கும்போது, தமிழக மக்களையும் கணக்கில் எடுப்போம். தமிழக மக்கள்தொகை 50 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.

தமிழக மக்கள்தொகை 1901ல் 1.92 கோடியாக இருந்தது. தொடர்ந்து, 1951ல் 3.01 கோடி, 1961ல் 3.3 கோடி, 1960 முதல் 1970 வரையிலான காலக்கட்டத்தில் 22.3 விழுக்காடு அதிகரித்து, 1971ல் 4.11 கோடியாக இருந்தது. அதன்பின், தீவிர குடும்ப கட்டுப்பாடு திட்டங்களால் மக்கள்தொகை பெருக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால், 1981ல் 4.8 கோடியானது. தொடர்ந்து, 1991ல் 5.5 கோடி, 2001ல் 6.24 கோடி, 2011ல் 7.24 கோடியாக இருந்த தமிழக மக்கள்தொகை தற்போது 8 கோடியை கடந்திருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது தமிழகத்தின் நிலை. ஆனால் உலக ஆளவில் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியா இலங்கை உட்பட இன்று 29 நாடுகளில் தமிழர்கள் வாழ்வதாக தெரிய வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், மொரேசியஸ், குவாதாலூப்பே ஆகிய இடங்களில் கணிசமான அளவில் தமிழர்கள் உள்ளனர்.  ஒரு நாட்டு மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, அதிக விகிதத்தில் தமிழர்கள் வாழ்வது இலங்கையில்தான்.

உலக மக்கள் தொகை, ஆசிய மக்கள், இந்தியர்கள், தமிழர்கள் என பார்த்த நாம் இப்போது உலகில் மதவாரியாக மக்களின் எண்ணிக்கையையும் பார்த்துவிடுவோம்.

இன்றைய உலகில் அதிக மக்கள்தொகைக் கொண்ட மதமாக கிறிஸ்தவம் உள்ளது. அதாவது, உலக மக்கள் தொகையில் 31 விழுக்காட்டினர், எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமானால் 217 கோடியே 31 இலட்சத்து 80 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்கள், இதில் 50 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். உலக மக்கள் தொகையில் 23 விழுக்காட்டினர், அதாவது 159 கோடியே 85 இலட்சத்து 10 ஆயிரம்பேர் இஸ்லாமியர்கள். இதற்கடுத்து மூன்றாம் இடத்தில் வருபவர்கள், மதநம்பிக்கையற்றவர்கள், அதாவது எந்த மதத்தோடும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்கள். இவர்கள் 112 கோடியே 65 இலட்சம் பேர். அதாவது, உலக மக்கள்தொகையில் 16 விழுக்காட்டினர். நான்காவது இடத்தில் வருவது இந்து மதத்தைப் பின்பற்றுவோர். இவர்கள், உலக மக்கள்தொகையில் 15 விழுக்காட்டினர், எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமானால் 103 கோடியே 30 இலட்சத்து 80 ஆயிரம் பேர். உலக மக்களுள் 7 விழுக்காட்டினர் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும், 6 விழுக்காட்டினர் சில சமூகங்களுக்குரிய பாரம்பரிய பழமை மதங்களைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். ஒரு விழுக்காட்டினர் பஹாய் நம்பிக்கை, தாவோயிசம், ஜைனம், சிந்தோயிசம், சீக்கியம், சவ்ராஷ்திரியம் போன்ற மதங்களைப் பின்பற்றுபவர்களாகவும், 0.2 விழுக்காட்டினர் யூத மத்தைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர்.

 உலக மக்கள் தொகை குறித்த ஒரு சிறு புள்ளிவரங்களை இவ்வாண்டின் உலக மக்கள்தொகை நாளையொட்டி வழங்கியுள்ளோம். ஜூலை 11ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மக்கள் தொகை நாளில் மக்கள் மீதான நம் அக்கறையை வெளிப்படுத்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2024, 13:38