தேடுதல்

படைப்புகளை காப்போம் படைப்புகளை காப்போம்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்

இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்ற உண்மை ஒவ்வொரு மனிதராலும் உணரப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மனிதன் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளை நிலங்கள், நீர் நிலைகள் என உலக அளவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், 1948ஆம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அவை உருவாக்கப்பட்டது. உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் சூலை 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். நமது பூமியைக் கொண்டாடுவதற்கும், அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும். நமது இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நினைவூட்டலாக இந்த தினம் செயல்படுகிறது. நம்மை சுற்றியுள்ள இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பு என்பதை நாம் உணர வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்ற உண்மை ஒவ்வொரு மனிதராலும் உணரப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் அதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.

இயற்கை, இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம். இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் அதுதான் இல்லை.

இந்த பூமி இங்கு வாழும் மனிதர்களுக்கு மட்டும் ஆனது அல்ல. இங்கு வாழும் அனைத்து உயிர்களுக்கும் தாவரங்களுக்கும் பொதுவானது. ஆனால் நாம் நவீன மயமாதல் என்ற பெயரில் மரங்கள், காடுகள், நீர்நிலைகள், மலைகள், கடல் வளம் உட்பட அனைத்தையும் சூறையாடி வருகிறோம். இதன் விளைவாகவே சுனாமி, நிலநடுக்கம், கடல் நீர்மட்டம் உயர்வு, வரலாறு காணாத வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு என பல சீர்கேடுகள் ஏற்படுகின்றன. காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதால் புவி வெப்பமயமாகும் ஆபத்து அதிகரித்து வருகிறது. மேலும், வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறத் தொடங்குகின்றன. இதனால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக நீர்நிலைகள் மாசுபாட்டால் உலகில் 0.5 விழுக்காடு நீர் மட்டுமே குடிநீருக்கு உகந்தது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் இன்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்ட்டிக் பொருட்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் மக்காமல் இந்த மண்ணின் வளத்தை கேள்விக்குறியாக்குகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன.

இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே. நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி இன்று தேவைப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழலின் முக்கிய அங்கங்களாகிய நீர், நிலம், காற்று ஆகிய இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டன. இப்பாதிப்புக்குப் பெயர் தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளன. இயற்கை சீராக இருந்தால், வளங்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், பூமி செழிப்பாய் இருக்கும் என்பது யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.

தூய்மையான இயற்கையும் இயற்கையின் வளங்களும் நமக்கு மட்டும் உரித்தானவை அல்ல. நம் முன்னோர்கள் நமக்கு அவற்றை அளித்தார்கள். அதை பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். இதை விட பெரிய பரிசை நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 

ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகின்றன. 19ஆம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தன. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர். இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன.

உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கை வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. தனிமனித உடைமைப் போக்குகள் உருவாகின. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இன்று, மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்துவிட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாக பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது. வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்துபோன நிலையில், இனி எத்தனை தலைமுறைகள் இந்த பூமியைப் பார்க்குமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்களின்  வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணியிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண் வளம், மேகங்கள்,  ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட இயற்கையின் கொடைதான்.  இதில், ஒன்றை இழந்துகூட மனிதர்கள் வாழவே முடியாது. வாழ அவசியமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு யாரோடு, எதனோடு வாழப்போகின்றோம் என்பது பெரிய கேள்விக்குறி.

இயற்கையை நேசிப்பதும் அதைப் பாதுகாப்பதும் நம் கடமை மட்டுமல்ல, பொறுப்பும்கூட. நம் தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்துவைப்போம். இயற்கை வளங்களின் இன்றியமையாமையை உணர்வோம்.

நவீனமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளைநிலங்கள், நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன. மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை. நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும். இயற்கை வளங்களை மரபுரீதியாக பாதுகாத்து இயற்கை வளங்களோடு ஒன்றற இணைந்து வாழும் வேளாண்மரபினரை போற்றி வணங்குவோம்.

இயற்கையைப் பாதுகாப்பதற்கும் உணவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?. உங்கள் உணவு, சுற்றுச்சூழலுக்கு நட்பான வழிகளில் இருந்தால், இயற்கை பாதுகாக்கப்படும். பருவகால மற்றும் உள்ளூர் தாவர அடிப்படையிலான உணவு தயாரிப்புகளுக்கு மாறுவது சிறந்த வழி. விலங்கு சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது சிறப்பு.

உரம் தயாரிப்பது என்பது நம் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைப்பதற்கும், நம் கொல்லைப்புறத் தோட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த மற்றும் திறமையான வழியாகும். காய்கறி கழிவு, முட்டைக் கூடுகள் மற்றும் தேநீர் பைகள் போன்ற சமையலறையிலிருந்து எஞ்சியவற்றை நம் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஓரம் தள்ளிவைத்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம். அதேபோல நம் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் காகிதத்தை பல வழிகளில் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

நம் சமூகத்தில் மரம் நடும் நிகழ்வை ஏற்பாடு செய்வோம், அல்லது நம் வீட்டு முற்றத்தில் ஒரு மரத்தை நட்டு வளர்ப்போம். நம் நீர் பயன்பாட்டைக் குறைப்போம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களைக் கண்டறிந்து நம் நேரத்தை முன்வந்து வழங்கலாம், அல்லது நம்மால் இயன்ற நிதியுதவி மூலம் ஊக்கமளிக்கலாம்.

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தைப் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர முயலலாம், அல்லது பூமியைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடலைத் துவக்கி விழிப்புணர்வை ஊட்டலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை ஆதரிப்போம்.

எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க நம்மால் இயன்றதை ஆற்றுவோம். மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2024, 13:04