தேடுதல்

காசா பகுதியில் சிறார் காசா பகுதியில் சிறார்  (AFP or licensors)

காசாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆபத்தின் பிடியில்

சவால்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் துணிவுடன் காசா குழந்தைகள் வாழ்கின்றனர். மக்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை போர் நிறுத்தம் மட்டுமே -சலீம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைவிடாத போரினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தொடர்ந்து ஆபத்தின் பிடியில் உள்ளனர் என்றும், பலர் தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து வாழும் சூழலை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தகவல் தொடர்பு அலுவலர் சலீம் ஓவேய்ஸ்

ஆகஸ்ட் 10 சனிக்கிழமை காசாவில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் மக்களின் நெருக்கடியான வாழ்க்கையின் அவலநிலை, போன்றவற்றைக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் யுனிசெஃப் பன்னாட்டு மனிதாபிமான குழந்தைகள் நல அமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் சலீம் ஓவேய்ஸ்.

காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைவிடாத போர் அங்குள்ள குழந்தைகளின் வாழ்க்கைக்கு அச்சமூட்டுகின்றது என்றும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடம் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து என எதுவுமே இல்லை அனைத்தும் தீர்ந்துபோய்விட்டன என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் சலீம்.

நீர் மற்றும் கழிவுகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ள சலீம் அவர்கள், புற்றுநோய் மற்றும் பிறப்பில் இருந்தே இருக்கக்கூடிய நோய்கள் போன்றவற்றின் சிகிச்சைக்கான மருந்து பற்றாக்குறையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.   

குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை தான் சென்று சந்தித்ததாக எடுத்துரைத்த சலீம் அவர்கள் மக்கள் வாழும் இடங்கள், சுற்றுப்புறப் பகுதிகள், அவர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் அவர்களின் கனவுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

சவால்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில்  துணிவுடன் அக்குழந்தைகள் அங்கு வாழ்கின்றனர் என்றும், மக்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை போர் நிறுத்தம் மட்டுமே என்றும் வலியுறுத்தியுள்ளார் சலீம்.

போர் நிறுத்தம் ஏற்பட்டு நாட்டுக்கு அமைதி கூடிய விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் காசாவின் குழந்தைகள் தங்களது வாழ்நாள்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும்,  முன்னெப்போதையும் விட மிகவும் அவசியமான போர்நிறுத்தத்தை ஆதரிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் சலீம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2024, 11:19