தேடுதல்

யசீதி குழந்தைகள் யசீதி குழந்தைகள்   (AFP or licensors)

யசீதி குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் கவனிக்கப்பட வேண்டும்

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள் இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப்புறப்பகுதியான சிஞ்சாரில் வாழ்ந்து வந்த 4 இலட்சம் யசீதி மக்களைக் கொன்றும், துன்புறுத்தியும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தியது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

யசீதி குழந்தைகள் மனஆரோக்கியம் பெற்றவர்களாக சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு அளிக்கப்பட்டு, பாதுகாப்பான வாழ்க்கை நிலைமைகளை அடைய உதவ வேண்டும் என்றும் பன்னாட்டு மற்றும் உள்ளூர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது சேவ் த சில்ரன் அமைப்பு.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி நினைவுகூறும் ஈராக் - சிரியா இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 1 வியாழன் அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது, ஆபத்தில் இருக்கும் சிறார்களைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் சேவ் த சில்ரன் என்னும் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பு,

ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப்புறங்களில் உள்ள சிஞ்சார் மலைகளில் வாழ்பவர்கள் யசீதி மக்கள். இவர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏறக்குறைய 1,300 யசீதி குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது சேவ் த சில்ரன் அமைப்பு.

இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் சிஞ்சார் பகுதியில் தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும், இடம்பெயர்ந்தவர்கள் குடும்பங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது குழந்தைகள் நல அமைப்பு.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள் இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியாவின்  எல்லைப்புறப்பகுதியான சிஞ்சாரில் வாழ்ந்து வந்த 4 இலட்சம் யசீதி மக்களைக் கொன்றும், துன்புறுத்தியும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2024, 15:42