உக்ரைனில் 2024-இல் குறைந்தது 340 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனில் போர் தீவிரமடைந்ததில் இருந்து, அந்நாட்டின் குழந்தைகள் 900 நாட்களாக வன்முறை, திகில், கற்றலில் இடையூறு, உயிரிழப்பு மற்றும் இடம்பெயர்வு போன்றவற்றை அனுபவித்து வருகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.
ஆகஸ்ட் 14, இப்புதனன்று, தனது எக்ஸ்தள பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம்,
கடந்த வாரம் Dnipro, Donetsk, Karkiv, Kherson, Kyiv மற்றும் Sumy ஆகிய பகுதிகளில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை குறித்து அறிக்கைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
2024 -ஆம் ஆண்டில், உக்ரைனில் குறைந்தது 340 குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் மற்றும் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் நல வசதிகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், எந்த ஒரு குழந்தையும் இந்தக் கொடுமையை அனுபவிக்க கூடாது என்றும், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அந்நிறுவனம், குழந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்குவது அதன் இலக்காக இருக்கக் கூடாது என்றும், குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்