தேடுதல்

போர் பகுதிகளீல் குழந்தைகள் போர் பகுதிகளீல் குழந்தைகள்  (AFP or licensors)

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவில் குழந்தைகள் நிலை

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வருங்காலத்திற்கு, சத்துணவின்மை என்ற பிரச்சனை பெரும் தடையாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவில் குறைந்த பட்சம் 7 கோடியே 70 இலட்சம் குழந்தைகள் மற்றும் பதின்மவயதினர் சத்துணவின்மையால் துன்புறுவதாக ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் வாழும் குழந்தைகளுள் 5 கோடியே 50 இலட்சம் பேர், அதாவது  பள்ளிக்குச் செல்லும் வயதுடைய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருள் மூன்றுக்கு ஒருவர் சத்துணவின்மை குறைபாட்டால் உடல் பருமனுடையவர்களாக அல்லது எடை கூடியவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2 கோடியே 40 இலட்சம் குழந்தைகள் போதிய சத்துணவில்லாத நிலையில் வளர்ச்சி குறைபாடுடையவர்களாகவும், ஒல்லியாகவும் இருப்பதாகவும் யுனிசெப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவில் வாழும், தாய்மையாகும் வயதுடைய பெண்களுள் 5 விழுக்காட்டினர், அதாவது 90 இலட்சம் பேர் போதிய சத்துணவின்றி வாடுவதாகவும், 11 கோடியே 40 இலட்சம் பெண்கள் சத்துணவு குறைபாடான உடல் பருமனால் துயருறுவதாகவும் யுனிசெப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

இப்பகுதியின் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியைக் காண்பதற்கு போதிய நடவடிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள போதிலும், இன்றும் 5 வயதிற்குள்ளான குழந்தைகளுள் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது யுனிசெப் அமைப்பு.       

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வருங்காலத்திற்கு இந்த சத்துணவின்மை என்ற பிரச்சனை பெரும் தடையாக இருப்பதாகத் தெரிவிக்கும் யுனிசெப் அமைப்பு, இப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகளே போதிய சத்துணவைப் பெற்று வளர்வதாகவும் தெரிவிக்கிறது.

மோதல்கள், அரசியல் நிலையற்றத் தன்மைகள், காலநிலை பாதிப்புக்கள், விலைவாசிகள் உயர்வு, சத்துணவின்மை, மருந்துக்கள் குறைபாடு, அடிப்படை வசதிகளின்மை போன்றவைகள் தொடரும்பட்சத்தில், குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவது தடுக்க முடியாததாகிவிடும் எனவும் தெரிவிக்கிறது யுனிசெப் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2024, 15:36