குழந்தைகள் வாழ்வில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வெள்ளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிழக்கு வங்கதேசத்தில் 30 ஆண்டுகள் வரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், ஏறக்குறைய 20 இலட்சம் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என்றும், இப்பேரழிவானது தீவிரமான வானிலை மாற்றம், குழந்தைகளின் வாழ்வில் நெருக்கடி, பொருளாதார சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார் வங்கதேசத்தின் யுனிசெஃப் துணைப்பிரதிநிதி Emma Brigham.
ஆகஸ்ட் 31 சனிக்கிழமை வெளியிடப்பட்ட யுனிசெஃப் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள வங்கதேச யுனிசெஃப் துணைப்பிரதிநிதி Emma Brigham அவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ யுனிசெஃப் முன்னிலையில் இருந்து செயலாற்றுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல குழந்தைகள் தங்களது அன்புக்குரிய உறவினர்கள், வீடுகள், பள்ளிகளை இழந்து முற்றிலும் ஆதரவற்றவர்களாக உள்ளனர் என்றும், அவர்களுக்கு அடிப்படை உதவிப் பொருள்களுடன், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், உணவு, தங்குமிடத்திற்கான பொருட்களை வழங்குவதில் யுனிசெஃப் முன்னணியில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் எம்மா.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லாக் குழந்தைகளைச் சென்றடைவதற்கும், அவர்களின் எதிர்காலத்தில் இன்னும் அழிவுகரமான தாக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கும் அதிக நிதி தேவைப்படுகிறது என்று வலியுறுத்தியுள்ள எம்மா அவர்கள், மொத்தமாக 56 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றும் 20 இலட்சம் குழந்தைகள் உதவி தேவைப்படும் நிலையில் ஆபத்தில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு காணாத பருவமழை காரணமாக தென்கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய ஆறுகள் நிரம்பி வழிகின்றன என்றும், இதன் விளைவாக, 52 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள எம்மா அவர்கள், சட்டோகிராம் மற்றும் சில்ஹெட் பிரிவுகளில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வயல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 5,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் உணவு மற்றும் அவசர உதவியின்றி தவித்து வருகின்றனர் என்றும், சில பகுதிகளில் மக்களை அணுகிச் செல்வது கடினமாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்