உக்ரைனில் நிகழ்ந்த தாக்குதலில் 4 குழந்தைகள் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று உக்ரைனில் நிகழ்ந்த தாக்குதலில் குறைந்தது 4 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகத் தனது எக்ஸ்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
உக்ரைனின் டினிப்ரோ, கீவ் மற்றும் ஒடெசா பகுதிகளில் நேற்று நடந்த தாக்குதல்களில் பிறந்து 5 மாதங்களே ஆன குறைந்தது 4 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகக் கூறியுள்ள அந்நிறுவனம், இந்தத் தாக்குதல்கள் மின்சக்தி மற்றும் நீர் விநியோக அமைப்புகளையும், அத்தியாவசிய சேவைகளுக்கான குழந்தைகளின் அணுகலையும் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
உசாடோவ், ஒடெசா பகுதியில் நேற்றைய தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அவர்களின் அவசரத் தேவைகளுக்கு உளவியல் மற்றும் பிற உதவிகளை வழங்க யுனிசெஃப் இயங்கு குழு (mobile) களத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அதன் எக்ஸ்தள பக்கத்தில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.
யுனிசெஃப் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய மாநில அலுவலகம் மற்றும் அதன் மாநில இயக்குனர் ரெஜினா டி டொமினிசிஸ் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் தீவிரமடைந்ததில் இருந்து உக்ரைனில் குறைந்தது 1,993 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், சராசரியாக இரண்டு குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்