உணவு நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தென்கிழக்கு ஆசியா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
தென்கிழக்கு ஆசியாவின் காலநிலை அவுட்லுக் 2024-ஆம் ஆண்டிற்கான் அறிக்கை ஒன்றில் அதிகரித்து வரும் உணவு விலைகள், காலநிலை மாற்றம் ஆகியவை தென்கிழக்கு ஆசியா முழுவதும் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISEAS - Yusof Ishak என்ற நிறுவனம் நடத்திய இவ்வாண்டுக்கான காலநிலை கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 70 விழுக்காட்டினர் போதுமான உணவைப் பாதுகாப்பதில் உள்ள சவால்களைப் பற்றிக் கூறியுள்ளதாகவும், இது 2023-இல் 60 விழுக்காட்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கை உரைக்கிறது.
இது குறித்து அந்நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்தவர்களில் பெரும்பகுதியினர், அதாவது 42.5 விழுக்காட்டினர் இந்த மோசமான நிலைமைக்கு உணவு விலைகள் உயர்வு காரணமாக இருப்பதாகக் கூறியுள்ள அதேவேளையில், 28.8 விழுக்காட்டினர் காலநிலை மாற்றத்தை உணவு கிடைப்பதை பாதிக்கும் முக்கிய காரணியாகவும் அடையாளம் காட்டியுள்ளனர்.
அடிக்கடி இடம்பெறும் வறட்சி, வெள்ளம், சூறாவளி, வெப்ப அலைகள் போன்ற தீவிர காலநிலை மாற்றங்கள் அந்தப் பகுதிகள் முழுவதும் உணவுப் பாதுகாப்பின்மையை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும் இந்தக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் என்பது இனி எதிர்காலத்தில் வரக்கூடிய ஒன்றல்ல, ஆனால் ஏற்கனவே உருவாகி மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக உணவு அணுகலைப் பெரிதும் பாதிப்படையச் செய்து வருகின்றன என்பதையும் இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
காலநிலை நடவடிக்கையில் உலகளாவிய தலைமை பற்றிய கருத்துகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டும் இக்கணக்கெடுப்பு, பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை உலகம் அடைய உதவுவதில் அனைத்துலக அளவில் ஜப்பான் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை முந்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்