வாரம் ஓர் அலசல் - செப்டம்பர் 26. உலக சுற்றுச்சூழல் நலநாள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செயற்கையை விரும்பி இயற்கையை அழிக்கிறான் நவீன மனிதன். இங்கு அழிவது இயற்கை மட்டுமல்ல, நம் வாழ்க்கையும் தான். மரத்தை வெட்டி காற்றை மறைத்தோம். நீரை மாசுபடுத்தி, இன்று விலைகொடுத்து வாங்குகிறோம். அரை அடி நோண்டி செடி நட்டிருந்தால் ஆயிரம் அடிக்கு ஆழ்துளை போடும் அவசியம் ஏற்பட்டிருக்காது. மழை தரும் மரங்களை வஞ்சித்தோம். மண் அரிப்பை தடுக்கும் வேர்களை இழந்தோம். நிலத்தடி நீரை உயர்த்தும் பசும் கிளைகளின் பயன் மறந்தோம். பறவைகளின் இருப்பிடங்கள் எங்கே? தான் இறந்தாலும் பயனாகும் மரத்திற்கு ஈடுண்டா? நாம் இறப்பினும் சுமப்பது அந்த மரம்தானே? வாழும்போது நிழல் தந்து, கனி தந்து, தன் உடலையே தந்து தியாகம் செய்யும் மரத்தை, இயற்கையை நாம் காக்கின்றோமா? மரங்களின் சுவாசமில்லையேல் மனிதன் சுவாசமில்லை என்பதையாவது உணர்ந்திருக்கிறோமா?.
அகிலத்தை இறைவன் அழகாய்ப் படைத்தான்! சுற்றும் பூமி! சுழலும் காற்று! கத்தும் கடலும் கதிரவன் ஒளியும்! வானும், நிலவும் வைகறைத் தென்றலும்! பூக்கும் மலர்களும், வீசும் மணமும்! காடும் மலையும், பாயும் ஆறும்! வீழும் அருவியும் காயும் கனியும்! பாடும் பறவைகள் ஆடும் மயில்கள்! எத்தனை எத்தனை அற்புதங்கள் இறைவன் படைப்பினிலே.
புல்வெளியில் படர்ந்திருக்கும் பனித்துளிகள், பூத்துக் குலுங்கும் சோலைகள், சில்லென்று தூறும் மழைச்சாரல், இசை பாடும் குயில்கள், உதிர்ந்து விழும் பூக்கள், அசைந்தோடும் நதி, அருவியின் ஓசைகள், மழைக்காலங்களின் வானவில், கரைகளை முத்தமிடும் கடலலைகள் என எத்தனையெத்தனை அழகு இயற்கையில் கொட்டிக்கிடக்கிறது.
நாம் எங்கே நிற்கிறோம்?
இத்தனை அதிசயங்களையும் அனுபவிக்கும் நாம் இயற்கை வளங்களை பாதுகாக்கிறோமா? அடுத்த தலைமுறைக்கு நம் திட்டம் என்ன? காடழித்து நாடாக்கும் திட்டத்தைக் கைவிட்டோமா? மண்வளத்தை மாசுபடுத்தினோம், காட்டு வளத்தைக் காயப்படுத்தினோம், நீர் வளத்தை நிர்மூலமாக்கினோம், வளிமண்டலத்தை வதைத்தோம், கனிம வளங்களைச் சுரண்டினோம். இதனால், காடும் பாலை நிலமாகியது, மழையும் அமிலமாகியது, இயற்கையின் சமநிலையும் சீர்குலைந்து சீற்றமாகியது.
தரிசு நிலமெல்லாம் தொழிற்சாலை அமைத்தோம். வயல்களையெல்லாம் மாடியாக்கி, மாடியில் தோட்டமைத்தோம். இப்போது சுற்றுச்சூழல் நாள் என்றும், பூமி நாள் என்றும், அதையும் தாண்டி சுற்றுச்சூழல் நலநாள் என்றும் நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையை பாதுகாக்கத்தான் உலகில் எத்தனை நாட்கள்? உலக சதுப்பு நில நாள், உலகக் காட்டுயிர் நாள், நதிகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை நாள், உலகளாவிய மறுசுழற்சி நாள், பன்னாட்டு வன நாள், பன்னாட்டு மலை நாள், உலக வானிலை நாள், உலக நீர்வாழ் விலங்குகள் நாள், உலக நீர் நாள், புவி நாள், பசுமை நாள், பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள், உலக சுற்றுச்சூழல் நாள், உலகப் பெருங்கடல்கள் நாள், பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள், உலக இயற்கை பாதுகாப்பு நாள், அமேசான் மழைக்காடு நாள், அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள், போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான பன்னாட்டு தினம், போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான அனைத்துலக தினம், உலக நதிகள் நாள், உலக சுற்றுச்சூழல் நலநாள் என அடுக்கிக் கொண்டேச் செல்லலாம். இது தவிர்த்து உலக விலங்களுக்கு என தனித்தனியாகவும் நாம் நாட்களை சிறப்பித்து வருகிறோம். இன்றைய நம் ஒலிபரப்பில் இவ்வாரம், அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி நாம் சிறப்பிக்கவிருக்கும் உலக சுற்றுச்சூழல் நலநாள் குறித்துக் காண்போம்.
காலநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவும் பல்லுயிர் பன்மைய இழப்பும், மாசுபாடும் குப்பைகளும் என்பவை, தற்போது உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. காலநிலை மாற்றம் என்பது சிறிது காலமாகக் கவலைக்குரிய ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இது மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, மனிதனின் பாதுகாப்புக்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டும். வளர்ந்து கொண்டேச் செல்லும் அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும், பசி என்னும் ஈரெழுத்துக்கு முன் அனைத்தும் மண்டியிடும். ஒரு மனிதனின் பசியை நீக்குபவன்தான் விவசாயி. ஆனால், இன்றைய உலகில் விவசாயியின் நிலையையும், சுற்றுச்சூழலின் நிலையையும் குறித்துச் சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கிய பின்னர் உருவானது தான் இந்த நாள். இந்த பூமியில் நிலவி வரும் சுற்றுச்சூழல், காற்று மாசு, இயற்கை வளங்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நமது பூமியின் சுற்றுச்சுழலைக் கொண்டாடுவதற்காகவுமே ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி, உலக பூமி தினத்தைச் சிறப்பிக்கிறோம். அதற்குப்பின் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடுகிறோம். இதெல்லாம் போதாதென்று, உலக சுற்றுச்சூழல் நலநாளை செப்டம்பர் 26 அன்று சிறப்பிக்கிறோம். உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது என்பதை நினைவுறுத்தும் நாளே இந்த சுற்றுச்சூழல் நலநாள்.
இந்த நாள் எதற்காக?
பொதுமக்கள் இயற்கையோடு இயைந்த, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலான வாழ்க்கை முறையை பின்பற்றவும், அவற்றின் அவசியத்தைப் பற்றிய புரிதலை உண்டாக்கவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களைப் பரப்பவும் இந்த நாள் நோக்கம் கொண்டுள்ளது. இது போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களில் கல்வியாளர்கள், ஊடகங்கள், கலைஞர்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும் எனவும் இந்நாள் எதிர்பார்க்கிறது.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை எல்லா வயதினருக்குமான கல்வித் திட்டங்களிலும் சேர்க்க வேண்டும். இதனாலேயே அந்தந்த தலைமுறையினரும், அவர்களுக்கும், எதிர்காலத்திலும் எவ்விதமான பாதிப்புகளை எதிர்கொள்வோம் எனும் அறிவும், அவற்றை சரிசெய்ய எந்த வகையான மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பதையும் உணர்வார்கள் என்ற விழிப்புணர்வையும் இந்நாள் தர முயல்கிறது.
சமூகத்தின் கடமைகள்
இளம்தலைமுறைகளுக்கு புறவுலகை போற்றும், மதிக்கும் வகையில், அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள தாவரங்கள், உயிரினங்களை அறிமுகப்படுத்தும் சுற்றுலா, இயற்கை நடை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது பயன்தரும்.
அரசாங்கத்தின், பெரும் தொழிலதிபர்களின், கொள்கை வகுப்பவர்களின் கவனத்திற்கு பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும், குரல் கொடுப்பதும் அரசு சாராத, சமூக அக்கறை கொண்ட அமைப்புகளின், இயக்கங்களின் கடமையாகிறது. அந்தந்த இடத்திற்குத் தகுந்த சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதும், பாதுகாப்பு திட்டங்களை வகுப்பதும், அரசுடனும், கொள்கை வகுப்பவர்களோடும், பொதுமக்களோடும் ஒன்று சேர்ந்து அவற்றை செயல்படுத்துவதும் அவசியம்.
அண்மைக் காலங்களில் இயற்கை உலகினைப் பற்றிய புரிதலும், தொழில்நுட்ப திறனும் வெகுவாக முன்னேற்றமடைந்துள்ளன. இதைப் பயன்படுத்தி பல்கலைக்கழகங்களும், அரசும், அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை ஆற்றல் உற்பத்தி, கட்டமைப்புகள், குறைந்த அளவு கார்பன் தடம் கொண்ட தொழிற்சாலைகளுக்கான மறுசுழற்சி, மறுபயன்பாடு செய்யக்கூடிய மூலப்பொருட்கள் உற்பத்தி முதலிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியது அவசியம். அத்தோடு, சீரழிந்த இயற்கை வளங்களை அந்தந்த இடத்திற்கு உகந்த, அறிவியல் முறையிலான நீண்டகால மீளமைப்புத் திட்டங்களை தொடங்க வேண்டும்.
இயற்கையின் அங்கங்களான மரங்கள், பறவைகள், பூச்சிகள் மூலம் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை அறியும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும், மாசுபாட்டைக் கண்டறியும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடவைக்கும் மக்கள் அறிவியல் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்.
தனிமனிதரின் கடமைகள்
பருவநிலை அவரசநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் கொள்கைகளை வகுத்து செயல்படும் அரசியல் தலைவர்களை ஆதரித்தல் வேண்டும்.
வாகனங்களைத் தவிர்த்து நடந்து அல்லது மிதிவண்டியில் செல்லுதல், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணித்தல், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருத்தல், நீரை அளவோடு செலவழித்தல், மின்சாரத்தை மிச்சப்படுத்துதல், பதப்படுத்தப்பட்ட, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்த்தல், நாம் வசிக்கும் பகுதிகளில் அருகிலேயே விளையும் தானியங்களையும், உணவுப்பொருட்களையும் வாங்குதல், உணவினை வீணாக்காதிருத்தல், வசதிக்கு ஏற்ப இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்குதல், இயற்கையை அழித்து, சுற்றுச்சூழலை நாசம் செய்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களையும் வாங்காத ஒரு பொறுப்பான நுகர்வோராக இருத்தல், இளைய சமுதாயத்திற்கு புறவுலகை நேசிக்க கற்றுக் கொடுக்க இயற்கையான வாழிடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று இயற்கையின் விந்தைகளை நேரில் காணும் அனுபவத்தை அளித்தல் என நமது அன்றாட நடவடிக்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த வரையில் மாற்றத்தை கொண்டு வந்து முன்னுதாரணமாகத் திகழ நம் ஒவ்வொருவராலும் முடியும். மின்சார பயன்பாட்டை குறைப்பது தனிப்பட்ட முறையில் எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்றே. நாம் சாப்பிடும் உணவு நம்முடைய பாத்திரத்தை வந்து அடைவதற்கு முன் பெரிய பயணத்தை மேற்கொண்டுவிட்டுதான் நம்மை வந்து சேருகிறது. எனவே அந்த சாப்பாட்டை வீணாக்குவதை தவிர்ப்போம். எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாகவும், உடல்நலனைப் பாதுகாக்கும் விதமாகவும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மிதிவண்டி, நடைபயண பயன்பாட்டை அதிகரித்தால் எரிபொருளை சேமிக்கலாம், புகை மாசைக் கட்டுப்படுத்தலாம், உடல்நலனை காக்கலாம். உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை இதன்வழி வழங்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்