தேடுதல்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வீடுகள்  (ANSA)

நேபாளத்தில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் 217 பேர் உயிரிழப்பு

வெள்ளப்பெருக்கு காலத்தில், நேபாள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், உடன்பிறந்த உணர்வுடனும் செயல்பட அழைப்பு விடுக்கும் அந்நாட்டு பிரதமர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது எனவும், 194 பேர் காயமடைந்து, மற்றும் 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் Asia  செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட  வீடுகள் முழுவதும் இடிபாடுகளுக்கு உள்ளான நிலையில், ஏறத்தாழ 14  பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும்,   நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பபடுத்தியுள்ளது எனவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய ஒரு சூழலில்  4,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும்,  Saptari மாவட்டத்தில் மட்டும் 1,000 வீடுகள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளன என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில், நேபாள மக்கள் அனைவரும்  ஒற்றுமையுடனும், உடன்பிறந்த உணர்வுடனும் செயல்பட வேண்டும்  என்று அழைப்பு விடுத்த  அந்நாட்டின் பிரதமர் பிரகாஷ் மான் சிங் அவர்கள், பருவ மழையின் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழை காரணமாக, 400க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,  நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைப் போக்குவரத்து இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரித்வி நெடுஞ்சாலையில் உள்ள  Jyaplekholaவில், இடிபாடுகளால் மூழ்கிய ஒரு பேருந்து உட்பட, வெள்ளத்தில் சிக்கித் தவித்த வாகனங்களில் இருந்து ஏறக்குறைய  35 உடல்கள்  மீட்கப்பட்டன என்றும், இன்னும்  சில இடங்களில் வாகனங்கள் சிக்கியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2024, 15:26