மத உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைக்கு இந்திய அரசு எதிர்ப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியாவில் மத உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்துலக மத விடுதலைக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது இந்திய அரசு.
மத தீவிரவாத குழுக்களால் தனிமனிதர்கள் தாக்கப்படுதல், கொல்லப்படுதல் என்பவை இந்தியாவில் தொடர்வதாகவும், மதத்தலைவர்கள் கைது செய்யப்படுவதும் வழிபாட்டுத்தலங்கள் அழிவுக்குள்ளாக்கப்படுவதும் இடம்பெறுவதாகவும் கூறும் அமெரிக்க அவையின் அறிக்கை பாரபட்சமுடையது மற்றும் வன்ம நோக்கமுடையது என குற்றம் சாட்டினார் இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் Randhir Jaiswal.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உரைக்கும் USCIRF எனப்படும் அனைத்துலக மதவிடுதலை குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அவை, மதம் தொடர்புடைய மோதல்களை தடுப்பதற்கு தற்போதைய அரசு தவறியுள்ளதை குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தங்கள் மத நம்பிக்கைக்காக ஒவ்வொரு நாளும் இரண்டு கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 10 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிரான 447 வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வவை தெரிவிக்கிறது.
மணிப்பூரில் 16 மாதங்களாக இடம்பெறும் பிரிவினைவாத மோதல்களில் 230க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதையும், ஏறக்குறைய அறுபதாயிரம் பேர் குடிபெயர்ந்துள்ளதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 835 வழக்குகள் 2020ஆம் ஆண்டிலிருந்து பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்