லெபனோன் சிறாரின் நம்பிக்கையை மீட்டெடுக்க போர்நிறுத்தம் அவசியம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
லெபனோனின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அமைதி தேவை என்றும், போர் நிறுத்தம் அவர்கள் இழந்த வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் முதல் படி என்றும் கூறியுள்ளார் யுனிசெஃப் துணை இயக்குநர் Ted Chaiban.
அக்டோபர் 17 வியாழனன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கடந்த மூன்று வாரங்களில் 100 குழந்தைகள் கொல்லப்பட்டனர் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று எடுத்துரைத்துள்ள Ted Chaiban அவர்கள், மோதலில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தைக் கடைபிடிப்பது மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மோதலில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரும் பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், வீடுகள், நலவாழ்வு மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்கள் மீதான தாக்குதல்கள் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் அமைப்பின் துணை இயக்குநர் Ted Chaiban.
ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் மற்றும் போர்களை நடத்துவதில் முன்னெச்சரிக்கை கொள்கைகளை மதிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள Ted Chaiban அவர்கள் அனைத்து மருத்துவ பணியாளர்களின் மாண்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படைத் தேவைகளான நீர், நலவாழ்வு, சாலைகள், பாலங்கள், மின்சார வசதிகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை வழங்கும் குடிமக்களின் வசதிகளை மதித்து பாதுகாக்க வேண்டும் என்று எடுத்துரைத்துள்ள சாய்ஹன் அவர்கள், போரினால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதில் மிக துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
விரக்தியின் விளிம்பில் தத்தளிப்பவர்களை மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்து, துறைமுகங்கள் மற்றும் விநியோக வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும், மனிதாபிமான பணியாளர்கள் தங்கள் மீட்புப் பணிகளை அச்சுறுத்தலின்றி மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அனைத்து வழிகளைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஏறக்குறைய 4,00,000 குழந்தைகள் உட்பட 12 இலட்சம் மக்கள் - ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர்.
வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் அல்லது தங்குமிடங்கள் மீதான தாக்குதல்கள் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன: கடந்த மூன்று வாரங்களில் 100 குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பினால் அன்புக்குரியவர்களை இழந்தும், வீடுகள் மற்றும் பள்ளிகள் அழிக்கப்பட்டும் குழந்தைகள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்கான கனவுகளை இழந்து பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்