தேடுதல்

ஏழைகளின் மேம்பாட்டிற்காக உழைக்கும் மறைப்பணியாளர் ஏழைகளின் மேம்பாட்டிற்காக உழைக்கும் மறைப்பணியாளர் 

உலக அளவில் 110 கோடி பேர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

திருஅவை எப்போதும் ஏழைகளின் திருஅவையாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய வார்த்தைகளை நினைவூட்டிய இந்திய திருஅவை அதிகாரி

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

உலக அளவில் வறுமையில் வாடும் மக்கள் அதிகம் உள்ள 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ASIA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் 110 கோடி மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும் கூறும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட ஆய்வறிக்கை, உலகின் 110 கோடி ஏழை மக்களில் ஏறத்தாழ பாதி பேர் அதாவது 48.1 விழுக்காட்டினர் மிகவும் வறுமையில் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 23 கோடியே 40 இலட்சம் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், 9 கோடியே 30 இலட்சம் பேர் பாகிஸ்தானிலும், 8 கோடியே 60 இலட்சம் பேர் எத்தியோப்பாவிலும், 7 கோடியே 40 இலட்சம் பேர் நைஜீரியாவிலும், 6 கோடியே 60 இலட்சம் பேர் காங்கோவிலும்  வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் 27  கோடியே  20 இலட்சம் ஏழைமக்களில் குடும்பத்திற்கு ஒருவர்   ஊட்டச்சத்து குறைபாடுள்ளவராய்  வாழ்கின்றனர் என்றும், இந்த நிலை ஆப்பிரிக்காவின் சஹாராவையடுத்துள்ள நாடுகளில் உள்ள 25  கோடியே  60  இலட்சம் மக்களை விட  அதிகம் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில், ஏறக்குறைய  83.7 விழுக்காட்டு  ஏழைமக்கள்  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்றும், ஒட்டுமொத்தமாக, நகர்ப்புற மக்கள்தொகையில் 6.6 விழுக்காட்டினருடன் ஒப்பிடும்போது, உலக கிராமப்புற மக்களில் 28 விழுக்காட்டு மக்கள் ஏழைகளாக உள்ளனர் என்றும் கூறுகிறது செய்தி நிறுவனம்.

இந்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன என்று கப்புச்சின் துறவியர் அவைச் செயலரும், நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய ஆயர் பேரவையின்   மேனாள்  நிர்வாகச் செயலருமான  அருள்பணி நித்திய சகாயம் தெரிவித்தார்.

மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாம் புறக்கணித்து விட்டோம் என்றும் நாட்டின்  பல வளங்கள் பெரும் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகின்றன என்றும்,   இந்த நிகழ்வுக்கு எதிராக குரல் எழுப்ப நாம் தவறிவிட்டோம் என்றும் எடுத்துரைத்த அருள்பணி நித்யா அவர்கள், திருஅவை எப்போதும்  ஏழைகளின் திருஅவையாக  இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  வலியுறுத்திய  வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தார்.

இந்த வறுமை நிலை இந்திய திருஅவைக்கு ஒரு சவால் என்று கூறிய அருள்பணி  நித்யா அவர்கள், இந்திய திருஅவையின் எல்லா  நிறுவனங்களிலும், ஏழைகளுக்கான கொள்கை எங்கே?  என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், ஒடுக்குமுறை, சாதி அமைப்பு, பிரிவினைகள், பாகுபாடுகள், உரிமைகள், சடங்குகள் தொடர்பான ஒரு சமூக ஒருங்கியக்கம்  தேவை என்றும்,  சமத்துவமின்மை, சமூகத்தில் பெண்களின் நிலை, கல்வியறிவின்மை, வேலையின்மை, தேக்கமடைந்த கிராமப்புற ஊதியங்கள் என அனைத்தையும் பற்றி நாம் அக்கறைக் கொள்வதில்லை என்றும் கவலை தெரிவித்தார் அருள்பணி நித்யா.

மக்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு ஒரு பொருளாதார-சமூக ஒருங்கியக்கம் தேவை என்றும் வலியுறுத்தினார் அருள்பணி நித்யா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2024, 17:03