லெபனோன் மக்களுக்கான காலரா தடுப்பு நடவடிக்கைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
லெபனோனில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் காலரா தொற்றுநோய் பரவலிலிருந்து பாதுகாக்கப்படவும், பொது நலவாழ்வுத் துறையின் தயார்நிலை, தடுப்பு மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் UNICEF தகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் கூறியுள்ளார் Edouard Beigbeder.
அக்டோபர் 19 சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நீர், நலவாழ்வு மற்றும் அடிப்படைத் தேவைக்கானப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் வடக்கு லெபனோனில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துரைத்துள்ளார் லெபனோன் பகுதிக்கான யுனிசெஃப் பிரதிநிதி Edouard Beigbeder.
போரானது, மக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகள் மற்றும் நலவாழ்வுச் சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, மாசுபடுத்துகின்றது என்றும், இத்தகைய மாசுபட்ட நீரினால் மக்களுக்கு காலரா தொற்று பரவும் சூழல் அதிகரிக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் Beigbeder.
இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகள், மக்கள் அதிகமாக வாழும் புலம்பெயர்ந்தோர் முகாம்கள் ஆகிய பகுதிகளில் காலரா தொற்றுநோய் பரவும் சூழல் உருவாகின்றது என்றும், சிறுகுழந்தைகள் குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்கள், தடுப்பூசி போடாதவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் ஆகியோர் காலரா தொற்றினால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
UNICEF, 100 அவசரகால மருத்துவ பொருள்கள், வாய்வழியாக செலுத்தப்படும் மருந்துகள், 22 மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டு, காலரா அறிகுறிகள் மற்றும் பிற தொற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்ட 6,000 லெபனோன் மக்களுக்கான சிகிச்சையினை வழங்கி வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் Beigbeder.
"லெபனோனில் ஏற்பட்டுள்ள போர் ஏற்கனவே குழந்தைகளைக் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், தற்போது காலரா மற்றும் பிற தொற்று நோய்கள் ஒரு புதிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் கூறியுள்ள Beigbeder அவர்கள், போர்நிறுத்தம் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் கொல்லப்படுதல் மற்றும் காயமடைதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தடுப்பதற்கும், அடிப்படைத்தேவைகள் சரியாகச் செயல்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதற்கும் போர்நிறுத்தம் முன்னெப்போதையும் விட முக்கியமானது,” என்றும் கூறியுள்ளார் Beigbeder.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்