தேடுதல்

பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் 

பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள்

ஆப்ரிக்காவில் உள்ள துணை சஹாராவில் 7,90,00,000 பெண்கள் அதாவது 22 விழுக்காட்டினர், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7,50,00,000 பெண்கள் அதாவது 8 விழுக்காட்டினர், மத்திய மற்றும் தெற்காசியாவில் 7,30,00,000 பெண்கள் அதாவது 9 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகளவில் 37 கோடிக்கும் அதிகமான பெண் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நேரடித் தொடர்பு இல்லாத வகையில் இணையதளம் மற்றும் வாய்மொழியாக பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

அக்டோபர் 11 வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட உள்ள பன்னாட்டு பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பு.

குழந்தைகள் அனுபவிக்கும் பெரும்பாலான பாலியல் வன்முறைகள் இளமை பருவத்தில் அதாவது 14 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கின்றன என்றும், உலகளவில் எட்டு பெண்குழந்தைகளில் ஒருவர், 18 வயதை அடையும் முன்னரே பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

"குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பது நமது மனசாட்சியின் மீது ஏற்பட்ட ஒரு கறை" என்றும், பெரும்பாலும் நன்கு தெரிந்த நபராலும், பாதுகாப்பாக உணர வேண்டிய இடங்களிலும் குழந்தைகள் இந்த வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் தலைமை இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் புவியியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார எல்லைகளைக் கடந்து செல்வதாக தரவுகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ள ரஸ்ஸல் அவர்கள், ஆப்பிரிக்காவில் உள்ள துணை சஹாராவில் 7,90,00,000 பெண்கள் அதாவது 22 விழுக்காட்டினர், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7,50,00,000 பெண்கள் அதாவது 8 விழுக்காட்டினர், மத்திய மற்றும் தெற்காசியாவில் 7,30,00,000 பெண்கள் அதாவது 9 விழுக்காட்டினர், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6,80,00,000 பெண்கள் அதாவது 14 விழுக்காட்டினர்,  இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4,50,00,000 பெண்கள் அதாவது 18 விழுக்காட்டினர், வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 2,90,00,000 பெண்கள் அதாவது 15 விழுக்காட்டினர், ஓசியானியாவில் 60 இலட்சம் பெண்கள் அதாவது 34 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பலவீனமான சூழலில் உள்ள குழந்தைகள் குறிப்பாக பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், கற்பழிப்பு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை பெரும்பாலும் போரின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் மோதல் வன்முறை நிறைந்த பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றது என்றும் ரஸ்ஸல் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2024, 13:40