தேடுதல்

போரால் பாதிக்கப்பட்ட லெபனான் குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்ட லெபனான் குழந்தைகள்  (AFP or licensors)

3 இலட்சம் குழந்தைகள் வரை லெபனானில் இடம்பெயர்ந்துள்ளனர்

லெபனான் நாட்டில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் போரால் உயிரிழந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

லெபனானின் Hezbollah அமைப்பினரின் இடங்களை இஸ்ராயேல் இராணுவம் தாக்கிவருவதைத் தொடர்ந்து, அங்கு துன்புறும் குழந்தைகளுக்கு உதவிகள் சென்றடைவதை அனைத்துலக சமுதாயம் உறுதிச் செய்யவேண்டும் என UNICEF என்ற குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ராயேலுக்கும் லெபனானின் Hezbollah அமைப்பிற்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களால் இதுவரை 3 இலட்சம் குழந்தைகள் வரை நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்கு 10 கோடியே 50 இலட்சம் டாலர் தேவைப்படுவதால், அனைத்துலக நாடுகளின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் யுனிசெப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

லெபனான் நாட்டின் நலத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் போரால் உயிரிழந்துள்ளனர், இதில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

3 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் வாழும் இடங்களை இழந்து வேறு இடங்களில் குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், லெபனான் நாட்டில் இடம்பெறும் மோதல்களின் பாதிப்பு அனைத்துக் குழந்தைகளிலும் காணமுடிகிறது எனவும் தெரிவிக்கிறது யுனிசெப் அமைப்பு.

பதட்டநிலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதில் அதிகக் கவனம் செலுத்திவரும் இந்த அமைப்பு, தென் லெபனான், வட லெபனான், பெய்ரூட், லெபனான் குன்று, Bekaa, Baalbek-Hermel பகுதிகளில் உள்ள 200 தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ள ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார்களுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளது. 

இடம்பெயர்ந்து, தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு போர்வைகள், குடிநீர், படுக்கை விரிப்புகள், நல ஆதரவுப் பொருட்கள், மனநல ஆலோசனைகள், உணவுப் பொருட்கள் ஆகியவைகளை வழங்கிவரும் UNICEF அமைப்பு, செப்டம்பர் மாதத்தில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உதவி மையங்களுக்கென 100 டன் அவசரகால மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 14:06