தேடுதல்

போலியோ சொட்டு மருந்து போலியோ சொட்டு மருந்து  (ANSA)

வாரம் ஓர் அலசல் – அக். 24. ஐ.நா. தினமும் போலியோ தடுப்பு தினமும்

உலக அமைதிக்கும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பிற்கும், உலக நாடுகளிடையே நட்பை வளர்ப்பதற்கும், உலக மக்களை இணைப்பதற்கும் 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலக நாடுகளில் அமைதி-பாதுகாப்பு தழைத்தோங்கவும், சர்வதேச பிரச்சனைகளை சுமூகமாக கையாளவும், ஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி உருவாக்கப்பட்டது. பொதுச்சபை, பாதுகாப்பு மன்றம், பொருளாதார மற்றும் சமூக மன்றம், பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலர் அவை மற்றும் செயலகம் என ஆறு முக்கிய அங்கங்களுடன் ஐ.நா. சபை நிறுவப்பட்டது. உலக நல நிறுவனம், உலக வங்கி, உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம், ஐ.நா. குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம், ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு போன்றவை  ஐ.நா. சபையில் உள்ள சில சிறப்பு நிறுவனங்கள் ஆகும்.

ஐ.நா. நிறுவனம் என்ற பெயரில் 1945ஆம் ஆண்டுதான் இது துவக்கப்பட்டாலும், இதற்கு முந்தையை வரலாறும் உள்ளது. முதலாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட உயிர் அழிவுகளைக் கண்டு அச்சம் கொண்ட உலக நாடுகள் அனைத்தும் மனித உயிர்கள்மீது அக்கறை கொண்டு ‘தி நேஷன்ஸ் லீக்’ (The nations league) என்ற அமைதி அமைப்பை 1920ஆம் ஆண்டு கொண்டு வந்தன. ஆனால், இந்த அமைப்பை ஒருங்கிணைப்பதிலும், வல்லரசு நாடுகளை சமாளிப்பதிலும் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்த ‘தி நேஷன்ஸ் லீக்’ என்ற அமைப்பின் தோல்வியாக இரண்டாம் உலகப் போர் நோக்கப்பட்டது. மீண்டும் இலட்சக்கணக்கான உயிர் சேதம், பொருளாதார சேதத்தை உலக நாடுகள் எதிர்கொண்டன.

இம்மாதிரியான கொடூரமான போர்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டின. உலக அமைதி, ஒருவருக்கொருவர் பாதுகாப்பினை உருவாக்குதல், உலக நாடுகளிடையே நட்பை வளர்த்தல், உலக மக்களை இணைத்தல் ஆகியவை பொருட்டு 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரை அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்தான் பரிந்துரை செய்தார்.

உலக நாடுகளில் பாதுகாப்பு, அமைதி, மற்ற நாடுகளை  நட்பு நாடுகளாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சர்வதேச பிரச்சனைகளை சுமூகமான முறையில் கையாள இந்த சபை உருவாக்கப்பட்டது. நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.சபையின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை வலியுறுத்த 1948ஆம் ஆண்டுமுதல் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஐ.நா. தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டத்திலிருந்து போர் சார்ந்த அதன் தீர்மானங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன என்பது பலரின் குற்றச்சாட்டு. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களை தடுக்க ஐ.நா. மேற்கொண்ட பல முயற்சிகளும், தீர்மானங்களும் கைக்கொடுக்கவே இல்லை. எடுத்துக்காட்டாக, 1967ஆம் ஆண்டு பன்னாட்டு எதிர்ப்புகளை மீறி பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. சைப்ரஸ் மீதான துருக்கியின் படையெடுப்பு, அமெரிக்க-ஈராக் யுத்தம், ஆப்கான் போர், சிரியா போர், இலங்கை உள்நாட்டுப் போர், அமெரிக்கா-ஈரான் மோதல், அமெரிக்கா-வடகொரியா மோதல், சீனாவின் தொடர் ஆக்கிரமிப்பு, உக்ரைன்-இரஷ்யா போர், மியான்மர் இராணுவ அத்துமீறல் என எதிலும் ஐக்கிய நாடுகள் சபை அமைதியை ஏற்படுத்துவதில் தவறிவிட்டது என்பவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுபவர்களும் உள்ளனர்.

ஆனால், நாம் கொஞ்சம் உற்று நோக்கினால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகளிடையே பெரிய அளவிலான போர் கடந்த 79 ஆண்டுகளில் ஏற்படவில்லை. அவ்வாறு எடுத்து கொண்டால் ஐ.நா சபை தனது தோற்றத்திற்கான நியாயத்தை சிறிது ஈடு செய்திருக்கிறது. ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள் உலக நாடுகளின் மோதலை சற்று குறைத்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.

உலக நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை அமைதியான முறையில் கையாண்டு சுமுகமான தீர்வுகளை கண்டு உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டி வருகிறது. ஐ.நா.சபையில் உள்ள பாதுகாப்பு மன்றம், நீதிமன்றம் போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் தீர்வுகள் கண்டு வருகிறது. அணு ஆயுத தடைச் சட்டத்தை 1963ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு அணு ஆயுத சோதனை தடைச் சட்டத்தை நிறைவேற்றியது.

இயற்கைச் சூழலை பாதுகாக்க 1992ஆம் ஆண்டு ரியோ தி ஜெனெரோவில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அனைத்து நாடுகளையும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வெற்றி கண்டது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டது. சூயஸ் கால்வாயை எகிப்து அரசர் நாசர் நாட்டுடைமையாக்கிய போது பிரிட்டன், பிரான்சு, இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்த்த வேளையில் ஐ.நா.சபையின் அமைதிப்படை எகிப்துக்கு சென்று சூயஸ் கால்வாய் பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு அதற்கு சரியான தீர்வை வழங்கி அமைதியை பாதுகாத்தது முக்கிய சாதனை ஆகும்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதியை கொண்டு செல்வதில் ஐ.நா. சபை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுவும் தொற்று நோய் காலங்களில் அதன் சேவை நிச்சயம் பாராட்டுக்குரியது.

ஏவுகணை பரிசோதனை காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த ஈரானை பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி ஒப்பந்தங்களை நிறைவேற்ற ஐ.நா. உதவியது. உலகில் நிலவும் வறுமையை ஒழிப்பதிலும், பாலின சமத்துவதும் ஏற்படுத்துவதிலும் ஐ.நா. சபை தொடர்ந்து தீவிர பங்களிப்பை அளித்து வருகிறது. அதிகாரமில்லாத அமைப்பு என தொடர்ந்து ஐ.நா. மீது விமர்சனங்கள் இருந்த போதிலும், உலக நாடுகளிடம் போரை தடுப்பதிலும், அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் ஐ.நா. சபையின் பங்களிப்பு நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

உலக போலியோ தினம்

போலியோ இல்லாத உலகை உருவாக்கும் நோக்கத்தில் அனைத்து நாடுகளுக்கும் விழிப்புணர்வை ஊட்டவும், போலியோ விழிப்புணர்வை ஊட்டுபவர்களை கொண்டாடும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி போலியோ ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. போலியோ என்பது வைரஸால் ஏற்படும் நிலை. போலியோவுக்கு மருந்துகள் இல்லை என்பதால் இது குறித்து முழுமையான விழிப்புணர்வு அவசியம்.

போலியோ தடுப்பு மருந்தை (ஐபிவி) உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய, டாக்டர் ஜோனாஸ் சால்க்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் உலக போலியோ தினம் கொண்டாடப்படுகிறது. இது முதலில் 1955இல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆல்பர்ட் சபின் வாய்வழி போலியோ தடுப்பு மருந்தை 1962ல் உருவாக்கினார். உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சி தொடங்கப்பட்ட 1988 ஆம் ஆண்டில் உலக நல அமைப்பால் (WHO) ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய அரசுகள், உலக நல அமைப்பு, ரோட்டரி இன்டர்நேஷனல், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), யுனிசெஃப், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்ட இந்த தடுப்பூசி கூட்டணி பிற்காலத்தில் போலியோ ஒழிப்பின் முக்கிய பகுதியாக மாறியது.

போலியோ வைரஸ் 1, 2, மற்றும் 3 நிலைகளில் இதில் முதல் வகை மட்டும் இன்னும் உள்ளது. உடலுக்குள் செல்லும் போலியோ வைரஸ் தொண்டை மற்றும் குடலில் தன் பெருக்கத்தைக் கொள்கிறது. சில சமயங்களில் மூளை மற்றும் முதுகுத்தண்டுவடத்தில் நுழைந்து பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இது கைகள், கால்கள் அல்லது சுவாசத்தை கட்டுப்படுத்தும் தசைகளை பாதிக்கலாம். போலியோமைலிடிஸ் என்பது மிகவும் தீவிரமான தொற்று வைரஸ் நோயாகும், இது பெரும்பாலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. இந்த நோய்க்கு தமிழில் இளம்பிள்ளைவாதம் என்றுபெயர்.

போலியோ இல்லாத உலகத்தை நோக்கிய உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டும் நாளாக இந்த நாள் இருக்கிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போலியோ வைரஸை ஒழிப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்களின் பங்களிப்புகளையும் இந்த நாள் மதிக்கிறது. பொதுவாக போலியோ என அழைக்கப்படும் போலியோமைலிடிஸைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. 2020ஆம் ஆண்டில் உலகில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே போலியோ பரவுவதாக அறிக்கை இருந்தது. நவம்பர் 2022இல் நைஜீரியாவில் கடைசியாகப் புகாரளிக்கப்பட்டதிலிருந்து இந்நோய் கண்டறியப்படவில்லை.

2009ஆம் ஆண்டில் இந்தியாவில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் 2011 சனவரி 13ல் தெரியவந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 2014 சனவரி 13இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 2014 சனவரி 13இல் வந்தது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் 2014 பிப்ரவரி 11ஆம் தேதி தான் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது.

அக்டோபர் 24ல் போலியோ நோய், போலியோ நோய் தடுப்பு நடவடிக்கைகள், போலியோ நோயின் அறிகுறிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் உடல் நல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. போலியோ வைரஸ் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு நாடுகளில் போலியோ நோயால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், மீண்டும் அந்தக் கொடிய நோய் வராமல் இருக்க நம்முடைய குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். நாமும் நம் பங்குக்கு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க நம்மால் இயன்றதை ஆற்றுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2024, 13:18