தேடுதல்

பத்திரிக்கை சுதந்திரத்திற்காகப் போராடும் மக்கள் பத்திரிக்கை சுதந்திரத்திற்காகப் போராடும் மக்கள்  (ANSA)

பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்

பத்திரிக்கையாளர்களைக் கொலை செய்து அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க வழி செய்பவர்களின் எண்ணிக்கை 85 விழுக்காடாக உள்ளது – யுனெஸ்கோ அறிக்கை

மெரினா ராஜ் - வத்திக்கான்

பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இன்னும் பல முயற்சிகளை எடுக்க நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுப்பதாகவும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுத்து தண்டனை வழங்குவது எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு முக்கிய நெம்புகோலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே (Audrey Azoulay).

நவம்பர் 2 சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் “பத்திரிகையாளர்களுக்கு எதிராக குற்றங்கள் இழைப்போர், தண்டனையிலிருந்து தப்பிக்க வழிசெய்வது நிறுத்தப்படவேண்டும் என அழைப்புவிடுக்கும் உலக நாளை” முன்னிட்டு, யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே (Audrey Azoulay).

பத்திரிக்கையாளர்களைக் கொலை செய்து அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க வழி செய்பவர்களின் எண்ணிக்கை 85 விழுக்காடாக உள்ளது என்றும், கடந்த ஆறுஆண்டுகளில் மொத்தம் 4 புள்ளிகள் மட்டுமே குறைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ள அவ்வறிக்கையில் இதற்கான முயற்சியில், அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்மையைப் பின்தொடர்வதை தங்களது முக்கிய வேலையாகச் செய்ததற்காக "2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் வீதம் கொல்லப்பட்டார்கள் என்றும், இத்தகைய வழக்குகளில் பெரும்பாலானவை, யாராலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கின்றது என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது யுனெஸ்கோ.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2006 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொலைகளில் 85% தீர்க்கப்படாததாக இருந்தது என்றும், இவ்வெண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000 ஆம் ஆண்டு 89% ஆகவும், 12 ஆண்டுகளுக்கு முன்பு 95% ஆகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.

2022-2023 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ அறிக்கையில்  மொத்தம் 162 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும், முந்தைய இரண்டு ஆண்டுகளான 2020-2021 உடன் ஒப்பிடுகையில் 38%, ஏறக்குறைய பாதி இறப்புகள் போர் மற்றும் வன்முறை சூழலை அனுபவிக்கும் நாடுகளில் நடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2024, 12:28