தேடுதல்

காசாவில் உணவுக்காகத் தவிக்கும் குழந்தைகள் காசாவில் உணவுக்காகத் தவிக்கும் குழந்தைகள்   (AFP or licensors)

காசாவின் வடக்கு பகுதியில் உணவு, மருந்தின்றி குழந்தைகள் தவிப்பு!

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு, முற்றுகையிடப்பட்டுள்ள காசாவின் வடக்கு பகுதியில் உள்ள எல்லா மக்களும் உயிரிழக்கும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்தது. ஆனால் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட பணியாளர்களின் முயற்சிகள் இஸ்ரேலிய படைகளால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டது : Save the Children

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவின் வடக்கு பகுதியில் நிகழ்ந்துள்ள 50 நாட்கள் முற்றுகையில் 10 வயதுக்குட்பட்ட 1,30,000 குழந்தைகள்  உணவு மற்றும் மருந்தின்றி தவித்து வருவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

கொல்லப்பட்ட 10 பேரில் 4-க்கும் மேற்பட்டோர் சிறார்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் 5 முதல் 9 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், இவர்களின் எண்ணிக்கைக் குறித்து எச்சரிக்கை எழுப்பும் இவ்வமைப்பு, உடனடி போர்நிறுத்தம் மற்றும் பாதுகாப்பான மனிதாபிமான அணுகலுக்கு அழைப்பு விடுத்து, வடக்கு காசாவில் சிக்கியுள்ளவர்களை மனிதாபிமான உதவிகள் சென்றடைய  அனுமதிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2024 அக்டோபர் 6 முதல், இஸ்ரேல் அரசால் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவின் வடக்குப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து விநியோகம் இன்றி முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும், இஸ்ரேலியப் படைகள் அப்பகுதியை இராணுவ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தபோது, ​​பஞ்சம் குறித்த ஆய்வுக் குழு (FRC) அப்பகுதியில் ஏற்பட்டு வரும் பஞ்சம் பற்றி எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு, முற்றுகையிடப்பட்டுள்ள காசாவின் வடக்கு பகுதியில் உள்ள எல்லா மக்களும் உயிரிழக்கும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்தது, ஆனால் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட பணியாளர்களின் முயற்சிகள் இஸ்ரேலிய படைகளால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது அவ்வமைப்பு.

5,000 குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், 725 நலக் கருவிகள் மற்றும் பிற உதவிகளையும் வழங்குவதற்காக, வடக்கு காசாவை ஏழு வாரங்களுக்கும் மேலாக அணுக முடியவில்லை என்று கவலை தெரிவித்துள்ள இவ்வமைப்பு, அந்தப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு, தனது உள்ளூர் துணைவர்களுடன் இணைந்து அப்பகுதியில் அவசர காலங்களில் 1,000 உணவுப் பொட்டலங்கள், 600 நலக் கருவிகளை விநியோகித்தது மற்றும் மனநல ஆதரவு, பொழுதுபோக்கு நடவடிக்கைகளை 15,000 குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கியது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2024, 12:48