தேடுதல்

காசா நகரின் ஒரு பகுதி காசா நகரின் ஒரு பகுதி  (DAWOUDABOALKAS)

இஸ்ராயேல் பிரதமருக்கும் ஹாமாஸ் தலைவருக்கும் கைது உத்தரவு

காசாவில் வாழும் அப்பாவி பொதுமக்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை, போரிடும் தரப்பினர் தடைச் செய்வதாகக் குற்றச்சாட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ராயேல்-பாலஸ்தீனிய மோதல்கள் இடம்பெற்றுவரும் காசா பகுதியில் இம்மோதல்களால் 44,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், இஸ்ராயேல் பிரதமருக்கும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் ஹாமாஸ் புரட்சிப்படை தலைவர்களுக்கும் கைது உத்தரவை வழங்கியுள்ளது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்.

காசா பகுதியில் இடம்பெறும் உயிரிழப்புகளுக்கு தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இஸ்ராயேல் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாஹு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant  மற்றும் ஹமாஸ் புரட்சிக்குழு தலைவர் அல் மாஸ்ரி உட்பட பல ஹமாஸ் குழு தலைவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்.

ஹமாஸ் குழு தலைவர் அல் மாஸ்ரியை கொன்றுவிட்டதாக இஸ்ராயேல் அறிவித்துள்ள போதிலும், அவர் மரணம் குறித்து அக்குழு எதுவும் உறுதிப்படுத்தாத நிலையில் அவரும்

கைது பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

காசாவில் வாழும் அப்பாவி பொதுமக்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்துப் பொருட்கள், மின்சாரம் மற்றும் எரிசக்தி போன்றவை மக்களைச் சென்றடைவதை இரு தரப்பினரும் தடைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டும் இந்த குற்றவியல் நீதி மன்றம், மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவால் இத்தீர்ப்பு ஒருமனதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

காசா பகுதி மோதல் 404 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை Gaza Strip பகுதியில் மட்டும் 44 ஆயிரத்து 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 270க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை யூத விரோதப்போக்கு என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ராயேல் அரசு அதிகாரிகள், தற்போது இஸ்ராயேல் வந்துள்ள அமெரிக்க பிரதிநிதி Amos Hochstein அவர்களை சந்தித்து இஸ்ராயேலுக்கும் இலபனோன் ஹெஸ்பொல்லா குழுவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகளை துவக்குவது குறித்து கலந்துரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2024, 15:45