வாரம் ஓர் அலசல் – பெண்ணடிமைத்தனம் ஒழிப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1979லேயே பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளும் ஒழிக்கப்பட்டவேண்டும் என்ற பரிந்துரையை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. அதற்கென ஒரு தீர்மானமும் நிறைவேற்றியது. 1981ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றும் தினம் மனித உரிமை நடவடிக்கையாளர்களால் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இதுவே மீண்டும் ஐநா நிறுவனத்தால் 1993ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டாலும், 2000ஆம் ஆண்டில் பிப்ரவரி 7ஆம் தேதிதான் நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்படுவதற்கான உலக தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக பன்னாட்டு மகளிர் தினம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு அனைத்துலக தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்’ என பாரதியார் சொன்ன கூற்றுக்கு அமைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க, மனிதர்கள் என பெருமைப்படும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நாள் இது. இந்த நாளுக்குக்கான தேவைதான் என்ன?, இதன் வரலாறு என்ன என கேட்கலாம்?
தொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25இல் மிரபல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக, பாதிக்கப்படும் பெண்களுக்காக சிறப்பாகக் குரல் கொடுத்தற்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரஃபேல் துருகில்யோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் இந்த மிரபல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் எதிர்ப்புச் சின்னமாக மாறினார்கள். 1980ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் தேதி முடிவடைவதாக திட்டமிடப்பட்டது.
எல்லா துறைகளிலும் பெண்கள் சமஉரிமையோடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று எவராவது சொன்னால் அவரது நம்பிக்கை உண்மையாகட்டும். ஆனால் உண்மை நிலை அப்படியில்லை. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எந்த இடத்திலும் பதிவுசெய்யாத பெண்களே நம்மிடையே இன்று அதிகம். இவர்களில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமெல்லாம் இல்லை. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக ஒடுக்கப்படுகிறவர்கள் இங்கே ஏராளம். இன்றைய தினத்தில், உலக அளவில் பெண்கள் சந்தித்துவரும் சில முக்கியப் பிரச்னைகளைக் கவனத்திற்குக் கொணர்வது அவசியமாகிறது.
பெரிய அளவில் விழிப்புணர்வும் மாற்றங்களும் இடம்பெற்றுள்ளனவா என்று நம்மை நாமே கேட்டோமானால், முன்னேற்றங்கள் உள்ளன என்பது உண்மைதான். எனினும், இன்னும் நாம் செல்லவேண்டிய பாதை வெகு தொலைவு உள்ளது என இன்றைய புள்ளிவிவரங்கள் பயமுறுத்துகின்றன. இன்றைய உலகில் 73 கோடியே 60 இலட்சம் பெண்கள் தங்கள் உடன்வாழ் ஆண்களாலேயோ அல்லது வெளி ஆட்களாலேயோ பாலியல் வன்முறைக்கு தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது உள்ளாக்கப்படுகின்றனர் என்கிறது ஐ.நா. நிறுவனம். இது உலகில் 15 வயதிற்கும் அதற்கும் மேற்பட்ட பெண்களுள் 30 விழுக்காட்டினர். 2023ஆம் ஆண்டில் மட்டும், அதாவது கடந்த ஆண்டில் மட்டும் 51 ஆயிரத்து 100 பெண்களும் சிறுமிகளும் தங்கள் உடன்வாழ் நபர்களாலேயோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயோ கொல்லப்பட்டுள்ளனர். இதனை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரு நாளைக்கு 140 பெண்களும் சிறுமிகளும் என்ற விகிதத்தில் கொலைகள் இடம்பெற்றுள்ளன. உலகில் காலநிலை மாற்றம் காரணமாக இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள மக்களுள் 80 விழுக்காட்டினர் பெண்கள் என்பதும் இன்னோரு வலிதரும் உண்மை.
எத்தியோப்பியாவை எடுத்துக்கொண்டோமானால், வறட்சியின் காரணமாக கால்நடைகளை வாங்குவதற்காக, சிறுமிகள் பாலர் திருமணத்திற்கென விற்கப்படுகின்றனர். நேபாளத்தில் 1990ஆம் ஆண்டில் பெண்கள் நாட்டைவிட்டு கடத்தப்படுவது, 3000 முதல் 5000 என்றிருக்க, இதுவே 2015ஆம் ஆண்டின் நில அதிர்ச்சிக்குப்பின் 12ஆயிரம் முதல் 20 ஆயிரமாக உயர்ந்தது. ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு ஜூலை வரையுள்ள நிலைகளைப் பார்த்தோமானால், தங்கள் வீட்டை விட்டு வெளியே தனியாகச் செல்வதற்கு 64 விழுக்காட்டு பெண்கள் அஞ்சுகிறார்களாம். ஹெய்ட்டி நாட்டை எடுத்துக்கொண்டால், அங்கு முகாம்களில் வாழும் பெண்களுள் 8 விழுக்காட்டினர் தங்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவுச் செய்வதற்காக ஒருமுறையேனும் பாலியல்தொழில் புரிந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா முழுவதும் 3,27,394 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறையின்கீழ் பதிவுசெய்யப் பட்டுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.
உலகில் 15 வயதிற்கும் 19 வயதிற்கும் உடபட்ட பதின்ம வயது சிறுமிகள் 1 கோடியே 50 இலட்சம் பேர் கட்டாய உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் சந்தைப்பொருட்களாக கடத்தப்பட்ட பெண்களுள் 40 விழுக்காட்டினர் பெரிய பெண்கள், 20 விழுக்காட்டினர் சிறுமிகள். இன்றைய உலகில் மோதல் இடம்பெற்றுவரும் பகுதிகளில் பாலர் திருமணங்கள் 4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அண்மை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால் இப்போது எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் மேலும் இருபது மடங்காக்கப் படவேண்டும், இல்லையெனில் 2030ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணங்கள் 90 இலட்சமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்றும் 139 நாடுகளில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் சட்டங்கள் தெளிவாக, தீவிரமாக இல்லை என்பதுதான் பிறிதொரு வேதனை.
பெண்கள் நாட்டின் கண்கள் என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவன் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விடயமாக மாறிவந்துள்ளது. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் இடம்பெறுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், கல்வி நிலையங்களில் என பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. அதேவேளை குடும்ப உறுப்பினர்களாலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களை சக உயிராக கருதாமல் உடைமையாக கருதும் ஆண் ஆதிக்க மனப்பான்மை உடைத்தெறியப்படவேண்டும் என்பதே இதற்கான தீர்வு.
பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிபோல் சித்தரித்து அவள் மீது களங்கத்தைச் சுமத்தும் நம் சமூக மனநிலையே, சட்டத்தின் உதவியை நாடவிடாமல் பெண்களைத் தடுக்கிறது. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்ணைப் பற்றி மட்டுமே பேசும் நம் சமூகம், அந்தப் பெண்ணின் மீது வன்முறையை நிகழ்த்திய ஆணைக் கண்டுகொள்வதில்லை. மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு என்கிற பெயரில் எழுதப்பட்ட நூல்களில் தொடங்கி, அனைத்துவிதமான ஊடகங்கள்வரை பெண்கள் ஆணுக்கு அடங்கி நடக்கிற அடிமைகளாகவும் காட்சிப் பண்டங்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றன. நாகரிகம் என்பது நம் ஆடைகளிலும் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகளிலும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்துவதில் உள்ளது.
அந்தப் புரிதல் இல்லாததால்தான் பெண்கள் குடும்ப வன்முறைக்கு இரையாகிறார்கள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள், கல்வியும் பணி வாய்ப்பும் இன்றி ஒடுக்கப்படுகிறார்கள், பொதுவெளியில் தரக்குறைவாக விமர்சிக்கப்படுகிறார்கள், கற்பெனும் பெயரால் தாழ்த்தப்படுகிறார்கள். இனியாவது பெண்ணுக்கு நீதி போதிப்பதை விட்டுவிட்டு ஆணாதிக்கச் சிந்தனை நிறைந்திருப்போருக்குச் சமத்துவத்தைப் பயிற்றுவிப்போம். அதுவே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் போன்றவற்றை அனுசரிப்பதற்குத் தேவையில்லாத நிலையை உருவாக்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்