தேடுதல்

கொல்லப்பட்ட குர்தி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எஞ்சிய உடல்களைத் தேடும் அதிகாரிகள் கொல்லப்பட்ட குர்தி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எஞ்சிய உடல்களைத் தேடும் அதிகாரிகள்   (AFP or licensors)

ஈராக்கில் கொலையுண்ட குர்தி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு!

ஈராக் மனித புதைகுழியில் ஏறத்தாழ 100 குர்தி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

1980-களில் சதாம் உசைனின் அன்ஃபால் (Anfal) பிரச்சாரத்தின்போது கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஏறத்தாழ 100 குர்தி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எஞ்சிய உடல்களை ஈராக் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது யூக்கான் செய்தி நிறுவனம்.

தெற்கு ஈராக்கில் தால் அல்-ஷேக்கியாவில் (Tal al-Shaikhia) கண்டுபிடிக்கப்பட்ட பெருந்திரள் மக்களின் புதைகுழி, மோசமான நுக்ரத் அல்-சல்மான் சிறைச்சாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது இடம் என்றும் உரைக்கிறது அச்செய்தி.

இந்த எஞ்சிய உடல்கள் மனிதத்தன்மையற்ற மரண தண்டனைகளின் அறிகுறிகளைக் காட்டுகின்றன என்றும், இதில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் மற்றவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கிறது.

இச்சம்பவத்தில் பலியானவர்கள் ஈராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள கலாரைச் (Kalar) சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது என்றும், சதாமின் அடக்குமுறைக் கொள்கைகளின் ஒரு பகுதியான அன்ஃபால் பிரச்சாரம் 1,80,000 குர்து இன மக்களைக் கொன்றது என்றும் கவலை தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

1980 மற்றும் 1990-க்கு இடையில் ஏறத்தாழ 13 இலட்சம் மக்கள் காணாமல் போவதற்கு வழிவகுத்த சதாமின் ஆட்சியின் கீழ் செய்யப்பட்ட அட்டூழியங்களை எடுத்துக்காட்டும் விதமாக அனைத்து எஞ்சிய உடல்களையும் மீட்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன என்றும், இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக, சதாம் உசைனின் ஆட்சி 2003-ஆம் ஆண்டு அகற்றப்பட்டு அவர் 2006-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2024, 12:16