காசாவில் நிகழ்ந்த தாக்குதலாலும் வெப்பக்குறைவாலும் 15 குழந்தைகள் பலி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆண்டின் இறுதி நாட்களில் கூட, காசாவில் குழந்தைகளுக்கு எதிரான கொடிய அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும், கடந்த மூன்று நாள்களில் மட்டும், குறைந்தது 15 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன எனவும், அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை இன்று, இந்தத் தகவலை தனது அறிக்கையில் வழங்கியுள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான யுனிசெஃப் மாநில இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர் அவர்கள், இப்போது, குளிர் மற்றும் சரியான தங்குமிடம் இல்லாததால் குழந்தைகள் இறப்பதை நாங்கள் நேரில் காண்கிறோம் என்ற தனது கவலையையும் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.
மனிதாபிமான முயற்சிகள் பெருமளவில் தடுக்கப்பட்டு, அங்கு உதவிகள் சென்றடைவது கடுமையாகத் தடைப்பட்டுள்ளன என்று கூறும் பெய்க்பெடர் அவர்கள், கடந்த நவம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 65 சுமையுந்துகள் மட்டுமே சென்றன என்றும், இது தேவைக்கும் மிகக் குறைவான அளவு என்றும், அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவில் உள்ள குடும்பங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குத் துயரங்களை எதிர்கொள்கின்றன என்றும், மேலும் இச்சூழல் குழந்தைகளுக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய நடவடிக்கையின் முக்கியமான தேவையை ஆண்டு இறுதியில் எடுத்துக்காட்டுகிறது என்றும், இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
யுனிசெஃப் நிறுவனம் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் உட்பட, கட்டுப்பாடற்ற மனிதாபிமான அணுகலுக்கும், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உடனடி போர்நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்து வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்