தேடுதல்

போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்   (ANSA)

மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பள்ளிக்குச் செல்லாக் குழந்தைகள்!

மோதல்கள் நிறைந்த சூழலில், பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் மற்றும் பாதுகாப்பான கற்றல் இடங்களை வழங்குவது உள்ளிட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2024-ஆம் ஆண்டில், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள 34 நாடுகளில் உள்ள பள்ளி செல்லும் வயதுடைய ஏறத்தாழ 10 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்பின்றி இருக்கின்றனர் என்றும், இது உலக சராசரியை விட கணிசமாக அதிக எண்ணிக்கையாகும் என்றும் கூறியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் இந்தப் புள்ளிவிவரம், மோதல், பலவீனம், கல்வி இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக்காட்டுவதுடன்,  சூடான், காசா, நைஜீரியா போன்ற நாடுகளில் வன்முறை, அழிவு மற்றும் பிற நெருக்கடிகள் காரணமாக இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலையில் உள்ளனர் என்றும் கவலை தெரிவிக்கிறது.

இச்சூழலில், பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் மற்றும் பாதுகாப்பான கற்றல் இடங்களை வழங்குவது உள்ளிட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இவ்வமைப்பு.

நெருக்கடி நிலைகளில் கல்வி, அதிக நிதி முதலீடு மற்றும் தாக்குதல்களில் இருந்து பள்ளிகளைப் பாதுகாப்பதில் உலகளாவிய கவனம் அதிகம் தேவை என்பதை வலியுறுத்துவதுடன், குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் நடுநிலையுடைய எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மை மீதான அவசர நடவடிக்கைக்கு ஆதரவாகவும் வாதிடுகிறது  Save the Children எனப்படும் இவ்வுலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2024, 12:29