தேடுதல்

யுனிசெஃப் அமைப்பால் பராமரிக்கப்படும் குழந்தைகள் யுனிசெஃப் அமைப்பால் பராமரிக்கப்படும் குழந்தைகள்   (ANSA)

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஆண்டு

எதிர்நோக்கி இருக்கும் 2025ஆம் ஆண்டில் இந்த போக்கை மாற்றியமைக்கவும், குழந்தைகளின் வாழ்க்கையை காப்பாற்றவும் மேம்படுத்தவும் நாம் அதிகமாக செயலாற்ற வேண்டும் - ரஸ்ஸல்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

மோதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை அதிக அளவில் கொண்ட மோசமான ஆண்டுகளில் ஒன்று 2024ஆம் ஆண்டு என்றும், போர்ப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உயிர்வாழ போராடுகிறார்கள், தங்களது குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் யுனிசெஃப் இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல்.

டிசம்பர் 28 சனிக்கிழமை உலகளாவிய வகையில் குழந்தைகள் மீதான ஆயுத தாக்குதல்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் அவர்கள், 2024ஆம் ஆண்டு அளவுக்கதிகமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான குழந்தைகள் போர், வன்முறை மற்றும் மோதல் நிலவும் பகுதிகளில் வாழ்கின்றனர் அல்லது மோதல் மற்றும் வன்முறை காரணமாக இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், 47 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் ரஸ்ஸல்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில், 4கோடியே 72 இலட்சம் குழந்தைகள் மோதல் மற்றும் வன்முறையால் இடம்பெயர்ந்த நிலையில், உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு குழந்தைகள், 40 விழுக்காடு புலம்பெயர்ந்தோர் மக்கள் தொகை, 49 விழுக்காடும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்பதாக உள்ளது எனவும் எடுத்துரைத்துள்ளார்.

உலகளவில் 281 மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் 2024ஆம் ஆண்டில் இறந்துள்ளனர் என்று வெளியிட்டுள்ள இரஸ்ஸல் அவர்கள், மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு வெளியே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தடுப்பூசி போடப்படாத அல்லது குறைவான தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர் என்றும், உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மீதான ஆயுத மோதலின் தாக்கம் 2024 ஆம் ஆண்டளவில் அழிவுகரமான அளவை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர் மண்டலங்களில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உயிர்வாழ போராடுகிறார்கள், குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள ரஸ்ஸல் அவர்கள், குழந்தைகளின் பள்ளிகள் குண்டுவீசித் தாக்கப்படுகின்றன, அவர்களது வீடுகள் அவர்களது குடும்பங்களைச் சிதைத்துவிட்டன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான அணுகல் மட்டுமல்ல, விளையாடுவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், குழந்தைகளாக இருப்பதற்கான வாய்ப்பையும் இழக்கிறார்கள், இந்த குழந்தைகளை உலகம் தோல்வியடையச் செய்கிறது என்றும், எதிர்நோக்கி இருக்கும் 2025ஆம் ஆண்டில் இந்த போக்கை மாற்றியமைக்கவும், குழந்தைகளின் வாழ்க்கையை காப்பாற்றவும் மேம்படுத்தவும் நாம் அதிகமாக செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ரஸ்ஸல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2024, 13:40