தேடுதல்

யுனிசெப் நிறுவனம் யுனிசெப் நிறுவனம்  

மனிதாபிமான உதவிகளுக்காக வேண்டுகோள் எழுப்பும் யுனிசெப்!

2025-ஆம் ஆண்டில், 146 நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள 21 கோடியே 30 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறோம் : Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 5, வியாழன் இன்று, தனது புதிய மனிதாபிமான பதில்மொழி அறிக்கையை 2025 இல் 146 நாடுகளில் உள்ள 10 கோடியே 9 இலட்சம் குழந்தைகளை உயிர்காக்கும் உதவியுடன் சென்றடைய 990 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டும் முறையீட்டை வெளியிட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது யுனிசெப் நிறுவனம்.

மேலும் வரும் 2025-ஆம் ஆண்டில் பல மோதல்கள், காலநிலை மாற்ற நிகழ்வுகள், இடப்பெயர்வு மற்றும் சுகாதார நெருக்கடிகளின்போது யுனிசெப்பின் மனிதாபிமான தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

உலகளவில், 21 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் கணிக்க முடியாத மற்றும் மாறிவரும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும், வரும் 2025-ஆம் ஆண்டில், யுனிசெப் அமைப்பின் மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் 10 கோடியே 9 இலட்சம் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் உதவுவதற்கு இந்த நிதி மிகவும் முக்கியமானது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்கள், குழந்தைகளின் மனிதாபிமான தேவைகளின் அளவு வரலாற்று ரீதியாக உயர்ந்த அளவில் உள்ளது என்றும், ஒவ்வொரு நாளும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தனது கவலையை பதிவுசெய்துள்ளார்.

2025-ஆம் ஆண்டை முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​146 நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள 21 கோடியே 30 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ள Russell அவர்கள்,  இது ஒரு அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2024-ஆம் ஆண்டில், 5 கோடியே 75 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மோதல்கள் அல்லது பிற மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிறந்துள்ளனர் என்றும், அங்கு யுனிசெஃப் நிறுவனம் அவரசகாலத்திற்கான உதவியைக் கோரத் தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ள Russell அவர்கள், இந்த எண்ணிக்கை 2025-இல் குறைந்தது 4,00,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2024, 15:16