தேடுதல்

சிரியா சிறார் சிரியா சிறார்  (AFP or licensors)

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

"ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதிசெய்வது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு - யசுமாசா கிமுரா.

மெரினா ராஜ் – வத்திக்கான்

“சிரியாவில் இருக்கும் குழந்தைகள் நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும், "கடந்த வாரம், புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுள் பெரும்பாலானவர்களான குழந்தைகளும் பெண்களும் ஏற்கனவே பல முறை வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் என்றும் கூறினார் யுனிசெஃப் அமைப்பின் சிரியா பகுதி பிரதிநிதி யசுமாசா கிமுரா.

டிசம்பர் 7 சனிக்கிழமை சிரியா நாட்டுக் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க அழைப்பு விடுத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த கிமுரா அவர்கள், சிரியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பயம் மற்றும் வன்முறை இல்லாமல் அமைதியாக வாழ உரிமை உள்ளது எனவே அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தனது அவசர வேண்டுகோளை யுனிசெஃப் மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

சிரியா நாட்டுக் குழந்தைகள் இன்னும் அதிகப்படியான பாதுகாப்பு மற்றும் நிலைத்த தன்மைக்குத் தகுதியானவர்கள் என்று கூறிய கிமுரா அவர்கள், "ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதிசெய்வது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி முதல் வடக்கு சிரியாவில் 35 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட மொத்தம் 149 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 75 இலட்சம் குழந்தைகள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறையின் மனித எண்ணிக்கை குறித்து UNICEF ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்றும், 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு போர்கள் மிகவும் தீவிரமானவை மற்றும் கொடியவையாக மாறிவிட்டன என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் துன்பங்களைத் தணிக்க, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு யுனிசெஃப் உறுதிபூண்டுள்ளது என்றும், சிரியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், மோதல் மற்றும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2024, 15:01