வாரம் ஓர் அலசல் - டிச.18. உலக குடியேற்றதாரர் தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இன்று உலக நாடுகளில் வாழும் மக்கள்களில் பூர்வகுடிகளை மட்டுமே கொண்ட நாடு என ஒன்று தனியாக இருக்க வாய்ப்பில்லை. ஆதியில், கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள் தன் தேவைகளின் பொருட்டு பல திசைகளுக்குப் பயணித்தனர். அவ்விதம் பிரிந்ததன் தொடர்ச்சியே பல இனங்கள், பல நாடுகள். பின் வந்த காலங்களில் தேவையின் பொருட்டே மனிதர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும் வேண்டியிருந்தது. இது அனைவருக்கும் பொதுவானது. தமிழில்கூட 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொல்லப்படுகிறது. அப்படி, பல்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் தொழில் ரீதியாகவும், இயற்கை பேரிடர் காரணமாகவும், போர் காரணங்களாலும் தங்கள் நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டை தேடி சென்று குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழவும் தொடங்குகிறார்கள். அவ்விதம் புலம் பெயர்ந்த மக்களுக்கான நாளாக டிசம்பர் 18-ம் தேதியை "புலம் பெயர்ந்தவர்களுக்கான தினம்" ஆக ஐ.நா.சபை கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4-இல் அறிவித்தது. அது ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு நாள் நடைமுறைக்கு வந்தது. புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் சமமாக மதிக்கப்படுவதையும், மீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து புலம்பெயர்ந்தோரின் நலவாழ்வு, பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் குறிப்பாக அவர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைத்திடவும் இந்த சிறப்பு நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அபாயங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை பற்றி விவாதிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
கடந்த இருபது ஆண்டுகளில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 இலட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 கோடியே 10 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. இது உலக மக்கள் தொகையில் 3.6 விழுக்காடு ஆகும். உலகத்தில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த மக்களையும் வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்கும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரிய அகதிச் சிக்கலை எதிர்கொண்டது ஐரோப்பா என்பது நமக்குத் தெரியாததல்ல. பொதுவாக இரண்டு வகையான புலம்பெயர்வுகள் உள்ளன. ஒன்று போர் அல்லது உள்நாட்டு கலவரத்தால் புலம்பெயர்வது. அந்த வகையில் பார்த்தால், இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக, அங்கு வாழ்ந்து வந்த ஓர் இனத்தின் பெரும்பான்மையான மக்கள் கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறினர். சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களால் இலட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். சிரியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். மற்றொரு வகை, வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்பவர்கள். இவர்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக செல்வதில்லை, தனித்தனி நபராக சென்று பின்னர் அங்கேயே குடியுரிமைப் பெற்று வாழ்பவர்கள். உண்மையில் போரினால் புகலிடம் தேடி வேறு நாட்டுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை விட, இவர்களே எண்ணிக்கையில் அதிகம். நாடுவிட்டு நாடு மாறி வாழ்வதற்குச் சரியான காரணங்கள் இருந்தாலும், சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கும், சட்டவிரோத குடியேற்றத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒருவர் ஒரு நாட்டிற்கு வர அனுமதிக்கப்படுகிறார் என்றால், அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்ல. ஆனால், சட்ட விரோதமாக குடியேறும் மக்களைப்பற்றிப் பேசும் ஊடகங்கள் பெரும்பாலும் குடியேற்றத்தைப் பற்றி விவாதிக்கின்றன, வெளியேற்றத்தைப் பற்றி அல்ல. அதாவது, மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்போது ஊடகங்கள் விவாதிப்பதிலை. ஏன் அப்பாவி மக்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு. குடும்பத்தினரை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள் என்பது குறித்துக் கேள்வி எழுப்புவதில்லை, அதற்கு தீர்வு காணவும் உழைப்பதில்லை. போர், இயற்கை பேரழிவு, துன்புறுத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவரே அகதி எனப்படுவார். ஆனால், ஒருவரை அகதி என்று நாம் ஒப்புக்கொண்டவுடன், அவர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் உள்ளன என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். "அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் இயக்கப்படுகிறார்கள்." என்பதை நாம் ஏற்றுக்கோண்டு அவர்களைப் புரிந்திருக்கிறோமா?.
பேரழிவுகள், தீவிர வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வன்முறை ஆகியவைகள் காரணமாக மக்கள் தானாக முன்வந்தோ அல்லது முழுவதுமாக விருப்பமின்றியோ புதிய இடத்திறகு நகர்கின்றனர். நல்ல நாட்கள், நல்ல வாழ்க்கை முறை ஆகியவைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிழைப்பு, படிப்பு உள்ளிட்டவைகளுக்காக மக்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
1970 காலகட்டத்தில் இந்தியர்கள் வேலைத் தேடி, வளைகுடா நாடுகளுக்கு படை எடுத்தனர். பின், படிப்படியாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். ஏறக்குறைய நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட கனடா நாட்டில் 2.5 விழுக்காடும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏறக்குறைய 6 விழுக்காடும், அரபு நாடுகளில் ஏறக்குறைய 35 இலட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் வாழ்கின்றனர். இதில் இந்தியர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து செல்லும் நாடு அமெரிக்க ஐக்கிய நாடு.
இன்றைய நிலைகளை எடுத்துகொண்டோமானால், 1 கோடியே 50 இலட்சத்துக்கும் மேற்பட இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், கலாச்சார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். தொழில்நுட்பத்துறை, மருத்துவம், தொழில், கல்வி போன்றவைகளில் இவர்களின் பங்களிப்பு குறிப்பிடும்படியானது. ஒரு நாட்டிலிருந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலாவதாக வருகிறது என்றால், அடுத்து மெக்சிகோ 1கோடியே 20 இலட்சம் மக்கள் வெளிநாடுகளில் வாழ்வதாகக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனாவோ 1 கோடியே 5 இலட்சம் மக்களை வெளிநாடுகளில் கொண்டுள்ளது. அதற்கடுத்துவரும் பிலிப்பீன்சோ 80 இலட்சம் மக்களை வெளிநாடுகளில் கொண்டுள்ளது. அண்மையில் இரஷ்யாவுடன் இடம்பெற்றுவரும் மோதல்களால், 2024ஆம் ஆண்டு ஜுலை வரையுள்ள கணக்கெடுப்பின்படி, 66 இலட்சம் உக்ரேனியர்கள் வெளிநாடுகளில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உக்ரைன் மொத்த மக்கள்தொகையில் 15 விழுக்காடு.
உலக அளவில் எடுத்துக்கொண்டோமானால், 2010ஆம் ஆண்டில் 5 கோடியெ 10 இலட்சம் மக்கள் தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் வாழ்ந்துவந்தனர். ஆனால் இதுவே 2020ஆம் ஆண்டில் 28 கோடியே 10 இலட்சமாக உயர்ந்தது. இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் தொகை 2000ஆம் ஆண்டு 12ஆயிரத்து 800 கோடியாக இருந்தது, 2022ல் 83ஆயிரத்து 100 கோடியாக உயர்ந்துள்ளது.
தாய் நாட்டிற்கு அதிக அளவு வெளிநாட்டு பணத்தை அனுப்பிய குடியேற்றதாரர்கள் என பார்த்தால், இந்தியா முதலிடத்திலும், அதற்கடுத்து மெக்சிகோ, சீனா, பிலிப்பீன்ஸ், எகிப்து ஆகியவையும் வருகின்றன. 2022ஆம் ஆண்டில் இந்தியர்கள் தாங்கள் வேலைச் செய்யும் நாடுகளிலிருந்து தாயகத்திற்கு அனுப்பியது 11ஆயிரத்து 100 கோடி டாலர்கள், அதாவது 10,000 கோடியை தாண்டிய முதல் நாடு இந்தியாதான்.
உலக அளவில் பார்த்தோமானல் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்துதான் பல்வேறு நாடுகள் அங்கு பணிபுரியும் தங்கள் நாட்டவர்களிடமிருந்து அதிக பணத்தைப் பெற்றுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் மட்டும் ஏனைய நாடுகளுக்கு தொழிலாளர்கள் வழி 7ஆயிரத்து 900 கோடி டாலர்கள் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கடுத்து சவுதி அரேபியாவிலிருந்து 3 ஆயிரத்து 900 கோடி டாலர்களும், சுவிட்சர்லாந்திருந்து 3 ஆயிரத்து 190 கோடி டாலர்களும், ஜெர்மனியிலிருந்து 2 ஆயிரத்து 560 கோடி டாலர்களும் அனுப்பப்பட்டுள்ளன.
மக்கள் இன்னும் இடம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பல கடுமையான சூழல்களில் குடிபெயர்வுகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நல்ல வாழ்வைத் தேடி சட்ட விரோதமாக குடிபெயர முயலும் மக்களுள் பலர் இறந்து பொவதும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களினால் அகதிகளாக செல்லும்போது நடைபெறும் கலவரம் மற்றும் இயற்கை பேரிடர்களாலும் பலர் இறந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்லும்போது பலர் நடுக்கடலிலேயே இறந்தும் விடுகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு இதே போல் கடல் வழியாகச் செல்லும்போது ஏறக்குறைய 3700க்கும் அதிகமான மக்கள் நடுக்கடலிலேயே இறந்துள்ளனர். மத்தியதரைக்கடல் பகுதி அகதிகளின் கல்லறைத் தோட்டம் அல்லது நீர் சமாதி என்றுகூட அழைக்கப்படுகிறது.
செப்டம்பர் 2023ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நடைபெற்ற நிலையான வளர்ச்சி இலக்கு மாநாட்டின்போது, அனைவரின் நலனுக்காகவும் 2030க்குள் ஏற்படும் குறிப்பிடத்தக்க சவால்களைச் சந்திப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு இடம்பெயர்வு திறனைத் அதிகரிப்பது முக்கியமாகும் என்று கூறப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். பல நாடுகளுக்கு இன்று மனித வளம் தேவைப்படுகின்றது. குறிப்பாக, மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து காணப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கு. வீட்டு வேலையாட்கள் என்ற தேவை ஒருகாலத்தில் இருந்தது இன்றோ பல நாடுகள் மருத்துமனைகளில் பணிபுரிய தாதியர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆசிய அரசுகளோடு பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. புலம்பெயர்தல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்