மியான்மாரில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் : ASEAN
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மியான்மாரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போர் தோல்வியுற்ற நிலையில் அங்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு இராணுவத்திடம் வலியுறுத்தியுள்ளது ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு.
மலேசியாவின் இலங்காவியில் (Langkawi) நடந்த உச்சிமாநாட்டின் போது, இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவ்வமைப்பு, இவ்வாண்டின் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களைக் காட்டிலும், அங்கு வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மியான்மாரின் இராணுவ ஆட்சிக்குழுவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஹசன் அவர்கள், நடைபெறவிருக்கும் தேர்தல் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ASEAN அமைப்பின் முந்தைய அமைதிக்கான முயற்சிகள் தோல்வியடைந்தன என்றும், தற்போது முக்கிய எதிர்ப்புக் குழுக்களைத் தவிர்த்து, இராணுவ ஆட்சிக்குழுவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவது அங்கு மேலும் பதட்டங்களை அதிகரித்து வருகின்றன என்றும் இவ்வுச்சி மாநாட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதில் ASEAN அமைப்பு பிளவுபட்டுள்ள வேளை, மலேசியா, இலாவோஸ் மற்றும் இந்தோனேசியாவின் முக்கூட்டு ஒப்பந்தப் பேச்சுக்களை நடத்த தாய்லாந்து முன்மொழிந்துள்ளதாகவும் இம்மாநாடு குறித்த செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், சீனா இன ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும், இராணுவ ஆட்சிக் குழுவிற்கும் மியான்மார் தேசிய மக்கள் கூட்டணி இராணுவத்திற்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்