யூபிலி ஆண்டின் பின்னணியில் கைதிகளை விடுவிக்கும் கியூபா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவின் பின்னணியில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற 553 கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது கியூபா நாடு.
கியூபாவின் இந்த முடிவு அந்நாட்டின் அரசுத் தலைவர் மிகுவல் டியாஸ்-கனெல் அவர்களின் கடிதம் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் இது வத்திக்கானுடனான அந்நாட்டின் நேர்மறையான உறவைப் பிரதிபலிக்கிறது.
கியூபாவின் வெளியுறவு அமைச்சகம் வத்திக்கானுடன் நடந்துகொண்டிருக்கும் கலந்துரையாடல்களை எடுத்துரைத்துள்ள வேளை, இதில் 2022-ஆம் ஆண்டு டியாஸ்-கனெல் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு, அங்குக் கைதிகளின் நிலைமை மற்றும் கியூபா மீதான அமெரிக்க கொள்கை ஆகியவை குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவிக்காலம் இவ்வாண்டு, ஜனவரி மாதம் 20-ஆம் தேதி முடிவடைவதற்குள் சில கைதிகள் விடுவிக்கப்படக்கூடிய நிலையில், அவர்களின் விடுதலை வரும் நாள்கள் மற்றும் வாரங்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூபிலி ஆண்டிற்கான திருத்தந்தையின் ஆணையில், தனிநபர்கள் தன்னம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கும் உதவ பொதுமன்னிப்பு அல்லது மன்னிப்பு வழங்குவது போன்ற நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுகளை திருத்தத்தை கேட்டுக்கொண்டதுடன், சட்டத்தின் மீதான மரியாதை மற்றும் சமூக மறுஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதன் பின்னணியில் கியூபா அரசு இம்முடிவினை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்