தேடுதல்

நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு இறைவேண்டல் செய்யும் பெண்கள் நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு இறைவேண்டல் செய்யும் பெண்கள்   (ANSA)

திபெத்தின் புனித நகரமான ஷிகாட்சேயில் பயங்கர நிலநடுக்கம்!

பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமான திபெத்திய நகரின் ஷிகாட்ஸே அருகே ஏற்பட்ட வலிமைவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குப் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 7, இச்செவ்வாயன்று, திபெத்தின் புனித நகரமான ஷிகாட்ஸே அருகே ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 188 பேர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள இமயமலைகளுக்கு அருகில் உள்ள கிராமப்புற மாவட்டமான டிங்ரியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும்,  அண்டை நாடான நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்தன என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் யூரேசிய தகடுகளுக்கு இடையே உள்ள டெக்டோனிக் செயல்பாடு (tectonic activity) காரணமாக இப்பகுதி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது என்று குறிப்பிடுகிறது அச்செய்தி.

தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக ஆன்மிக அதிகாரம் பெற்ற பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமான தஷில்ஹுன்போ துறவிமடம் ஷிகாட்சேயில் உள்ளது என்று கூறும் அச்செய்தித் தொகுப்பு, தலாய் லாமா அவர்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2025, 12:19